மத்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் 2 நாட்கள் பயணமாக ரஷ்யாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
அதன்படி, எதிர்வரும் 7 மற்றும் 8ஆம் திகதிகளில் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர் ரஷ்யாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார்.
இதில் முக்கியமாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜெய் லவ்ரோவுடன் இருதரப்பு உறவுகள் குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து இந்தப் பேச்சுவார்த்தையில் இருவரும் விவாதிக்கவுள்ளனர்.
ரஷ்யா-உக்ரைன் போருக்கு மத்தியில் ஜெய்சங்கரின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
ஜெய்சங்கரின் ரஷ்யப் பயணம் குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்ச்சி, உக்ரைன் போர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு வெளிப்படையானது என்று தெரிவித்தார்.
இருதரப்பு வர்த்தகம், தொழில்நுட்பம், பாதுகாப்பு உள்ளிட்ட ஏனைய முக்கியப் பிரச்சினைகள் இந்தப் பேச்சுவார்த்தையில் கூடுதலான முக்கியத்துவம் பெறும் என்றும் அரிந்தம் பாக்ச்சி விளக்கம் அளித்தார்.