கண்டாவளை பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், கலாச்சார உணவுத் திருவிழா இடம்பெற்றது.
பரந்தன் விளையாட்டு மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் இந்த உணவுத் திருவிழா ஆரம்பமானது.
குறித்த நிகழ்வு கண்டாவளை பிரதேச செயலாளர் ரி.பிருந்தாகரன் தலைமையில் ‘கிராமத்திலிருந்து உணவு பாதுகாப்பு’ எனும் தொணிப்பொருளில் இடம்பெற்றது.
இதன்போது கிராமத்தில் எளிதாக கிடைக்கக்கூடிய உணவு பண்டங்களைக் கொண்டு பல்வேறு வகை உணவுகள் தயாரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டதுடன், இலவசமாக மக்களும், மாணவர்களும் சுவைக்கும் வாய்ப்பும் வழங்கப்பட்டது. அத்துடன், குறித்த உணவுகளை தயாரிக்கும் முறைகளும் செய்து காண்பிக்கப்பட்டது.
பனம்பழம், மரவள்ளி, நிலைக்கடலை, சத்துணவுகள், கடலுணவு என 10க்கு மேற்பட்ட உணவு பந்தல்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு மூலப்பொருளிலும் இருந்து 10க்கு மேற்பட்ட உணவுகள் தயாரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டன.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோர் கலந்து கொண்டதுடன், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.