நாட்டின் மொத்த சனத்தொகையில் குறைந்தபட்சம் 5.7 மில்லியன் மக்கள் மனிதாபிமான உதவிகள் தேவைப்படும் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
செஞ்சிலுவை மற்றும் செஞ்சிலுவை சங்கங்களின் சர்வதேச கூட்டிணைவு இதனைத் தெரிவித்துள்ளது.
அதுமாத்திரமன்றி உடனடி மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கும், கட்டமைப்பு ரீதியிலும் சேவை வழங்கலிலும் ஏற்பட்டிருக்கும் சீர்குலைவை சீரமைப்பதற்கும் அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாவிடின் மேற்குறிப்பிட்ட தொகை மேலும் அதிகரிக்கும் எனவும், அதனால் ஏற்படக்கூடிய பின்விளைவுகள் மேலும் தீவிரமடையும் எனவும் எச்சரித்துள்ளது.
இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் தீவிர பொருளாதார நெருக்கடியின் விளைவாக நாட்டுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையிலேயே செஞ்சிலுவை மற்றும் செஞ்சிலுவை சங்கங்களின் சர்வதேச கூட்டிணைவு மேற்குறிப்பிட்டவாறு எச்சரித்துள்ளது.
இந்த ஆய்வறிக்கையானது நாடளாவிய ரீதியில் 11 மாவட்டங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 871 குடும்பங்களிடம் நேரடியாக நடத்தப்பட்ட நேர்காணல்கள்,
நுவரெலியா மாவட்டத்தில் 10 கிராமங்களிலுள்ள 300 குடும்பங்களிடம் பிரத்யேகமாக நடத்தப்பட்ட ஆய்வுகள், 24 குழு ரீதியான கலந்துரையாடல்கள், தகவல் வழங்குனர்கள் 15 பேரிடம் நடத்தப்பட்ட நேர்காணல்கள், ஏனைய தரவுகள் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.