பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் 2019ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு நாடாளுமன்றத்தில் அவசர சட்டமாக கொண்டுவந்தது. இது பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதனை எதிர்த்து பலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். திமுகவின் ஆர்.எஸ்.பாரதி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் இந்த வழக்கில் இடையீட்டு மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதிகள் எஸ்.ரவீந்திர பட், தினேஷ் மகேஸ்வரி, எஸ் பி பார்திவாலா மற்றும் பேலா திரிவேதி ஆகிய 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்தது.
இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணை செப்டம்பர் மாதத்தில் நடைபெற்ற நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.
10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திருத்தம் செல்லும் என நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பேலா திரிவேதி தீர்ப்பு வழங்கினர்.
பொருளாதாரத்தில் நலிவடைந்த முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதன்மூலம், அரசியலமைப்பின் அடிப்படை கூறுகள் மீறப்படவில்லை என்று நீதிபதி பேலா திரிவேதி கூறினார்.