2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான உணவுத் தேவைகளை மதிப்பிடுவதற்கும், உணவு நிலைமை குறித்த அறிக்கையை சமர்ப்பிப்பதற்கும் அனைத்து நாடுகளின் அனைத்து விவசாய அமைச்சர்களின் கூட்டத்தை கூட்ட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
இந்த வியடம் தொடர்பாக அவர், COP27 இன் தலைவர் என்ற முறையில் ஐ.நா மற்றும் எகிப்தின் செயலாளர் நாயகத்திடம் வலியுறுத்தியுள்ளார்.
எகிப்தின் ஷர்ம் எல் ஷேக் நகரில் நடைபெற்று வரும் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் உணவு பாதுகாப்பு தொடர்பான வட்டமேசை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உலகளாவிய உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக,பலதரப்பு மற்றும் நிதி ஆதாரங்களுடன் நெருக்கமாகச் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தியுள்ளார்.
2023 பெப்ரவரிக்குள் இத்திட்டத்தை இறுதி செய்வது அவசியமானது எனவும் 2023ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டின் இறுதிக்குள் இதனை அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இல்லையெனில் நாடுகளின் அரசியல் மற்றும் சமூக கட்டமைப்புகளுக்கு ஏற்பட்டுள்ள சேதத்தை ஈடுசெய்ய முடியாததாக இருக்கும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் உலகளாவிய உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஒரு நடுத்தர காலத் திட்டத்தைத் தொகுக்க வேண்டிய அவசரத் தேவையையும் அவர் இதன்பொது எடுத்துரைத்துள்ளார்.