சிறிய படகுகள் மூலம் சட்ட விரேதமாக பிரித்தானியாவுக்குள் நுழையும் புலம்பெயர்ந்தோர் தொடர்பான பிரான்ஸூடனான ஒப்பந்தம் பற்றிய பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தில் இருப்பதாக, எண்-10 அலுவலகம் தெரிவித்துள்ளது.
ரிஷி சுனக் பிரதமராக பதவியேற்ற பிறகு தனது முதல் சர்வதேச தோற்றத்தில் தோன்றிய பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனை சந்தித்து இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பைத் தொடர்ந்து, சிறிய படகுகளில் கால்வாயைக் கடக்கும் நபர்களின் எண்ணிக்கையைச் சமாளிக்க எளிமையான தீர்வு ஒன்றும் இல்லை என்று சுனக் கூறினார்.
ஆனால், சட்டவிரோத குடியேற்றம் தொடர்பாக ஐரோப்பிய நாடுகளுடன் நெருக்கமாக பணியாற்ற வாய்ப்பு உள்ளது என கூறினார். மேலும் விபரங்கள் வரும் வாரங்களில் வெளியிடப்படும் என்றும் கூறினார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், மற்ற ஐரோப்பிய தலைவர்களுடனும் பேசி வருவதாகவும், எங்கள் ஐரோப்பிய கூட்டாளிகளுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம், ஒரு மாற்றத்தை ஏற்படுத்தலாம், சட்டவிரோத குடியேற்றத்தின் சவாலை பிடிப்பது மற்றும் சட்டவிரோதமாக வருபவர்களை தடுக்க முடியும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.
இரு தலைவர்களும் ஒழுங்கற்ற குடியேற்றத்தின் சவாலை எதிர்கொள்ள ஒருங்கிணைப்பை முன்னெடுக்க ஒப்புக்கொண்டதாக எலிசி அரண்மனை தெரிவித்துள்ளது.
எகிப்தில் நடைபெற்றுவரும் COP27 காலநிலை உச்சி மாநாட்டின் போது, மக்ரோனுடனான சந்திப்பு நடைபெற்றது.