கடலட்டை பண்ணை விடயம் தொடர்பாக, யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் ஆரியகுளம் நாகவிகாரை விகாராதிபதி மீகஹஜந்துர சிறிவிமல தேரரை இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) சந்தித்து கலந்துரையாடினர்.
யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க சமாசங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது.
குறித்த சந்திப்பில் சம்மேளனத்தின் தலைவர் அ.அன்னராசா, உப தலைவர் நா.வர்ணகுலசிங்கம் உள்ளிட்ட பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
கடலட்டை பண்ணைகளை அமைக்கும் போது அதனை ஆய்வுக்குட்படுத்தி மேற்கொள்ளல், ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கடலட்டை பண்ணை தொடர்பாக பேசுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துதல் போன்ற விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
அரசியல் தலைவர்கள் உட்பட அரசாங்க அதிகாரிகள் கடலட்டை பண்ணை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காத நிலையில் மதத்தலைவர்களை சந்தித்து அவர்கள் மூலம் அரசியல் தலைவர்களை அணுகுவதற்காக இந்த நடவடிக்கையை தாங்கள் மேற்கொள்வதாக கடற்றொழிளர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்ததுடன் சகல மதத் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடவும் தீர்மானித்துள்ளதாக தெரிவித்தனர்.