பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு, பிணை வழங்கப்பட்டுள்ளது.
முதலாவது பிணை மனு கடந்த 7ஆம் திகதி நிராகரிக்கப்பட்ட, இரண்டாவது பிணை விண்ணப்பம் கடந்த 14 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டது.
இரண்டாவது பிணைக்கோரிக்கை மனுவினை எதிர்வரும் 08 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளதாக நிவ் சவுத்வேல்ஸ் நீதிமன்றம் முன்னதாக அறிவித்திருந்த போதும், தனுஷ்க குணதிலக்கவின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கைக்கு அமைய இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதற்கமைய இன்றைய தினம் தனுஷ்க குணதிலக்கவை பிணையில் செல்ல சிட்னியில் உள்ள டவுனிங் சென்ட்ரல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 150,000 அமெரிக்க டொலர்கள் பிணைத்தொகையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மேலும், தினசரி பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிடுதல், இரவு 9 மணி மற்றும் காலை 6 மணி வரை வெளியே செல்லக்கூடாது, புகார்தாரரைத் தொடர்பு கொள்ளாதது மற்றும் டிண்டர் மற்றும் டேட்டிங் செயலிகளை அணுகுவதற்கான தடை உள்ளிட்ட நிபந்தனைகளில் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
31 வயதான தனுஷ்க குணதிலக்க, தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக சிட்னி யுவதி ஒருவர் பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து அண்மையில் கைது செய்யப்பட்ட தனுஷ்க குணதிலவை, எதிர்வரும் ஜனவரி 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சிட்னி நீதிமன்றம் உத்தரவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.