தற்போதைய நிதிக் கொள்கைகளுக்கு அமைய அடுத்த வருட இறுதியாகும்போது பணவீக்கத்தை 4 -5 சதவீதம் அளவில் பேணமுடியும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை தொடர்பான அமைச்சர்கள் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்ததாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மாறுபட்ட வட்டி விகிதங்களின் கீழ் பெறப்பட்ட கடன்களுக்கான வட்டி வீதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளமையினால், அசௌகரியங்களுக்கு உள்ளான வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்குமாறும் வங்கிகளுக்கு மத்திய வங்கி பணிப்புரை விடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வட்டி விகித அதிகரிப்பு காரணமாக சில கடனாளிகளின் சம்பளம் முழுவதும் கடன் தவணையாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சபை உறுப்பினர்கள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையிலரல், வாடிக்கையாளர்களுக்கு வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தி, குறிப்பிட்ட சலுகைக் காலத்திற்கு உரிய வட்டியை மட்டும் செலுத்தும் வாய்ப்பு இருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.