இந்திய – சுவீடன் நிறுவனங்கள் இரு தரப்பிலிருந்தும் புதிய முன்முயற்சிகளை ஆதரிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் கலாநிதி ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
மெய்நிகர் முறையில் நடைபெற்ற இந்தியா- சுவீடன் புத்தாக்க தினத்தின் 9ஆவது நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்தியா மற்றும் சுவீடனில் பொதுசுகாதாரம், தாதியர்களை பணிக்கு அனுப்புதல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான குறிப்பிடத்தக்க சாத்தியக்கூறுகளைக் கொண்ட கூட்டுத் திட்டங்களைப் பற்றி இந்திய அரசின் உயிரி தொழில்நுட்பத் துறை மற்றும் சுவீடன் அரசாங்கத்தின் வின்னோவா ஆகியன மானியங்களை அறிவித்திருந்தன.
அத்துடன், செயற்கை நுண்ணறிவு உதவியுடன் பொதுசுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான குறிப்பிடத்தக்க ஆற்றலைக் கொண்ட புதிய தீர்வுகளை தயாரிப்பதை நோக்கமாகக் கொண்ட திட்டங்களை செயற்படுத்த நிதியுதவி அளிப்பதற்கும் இணக்கம் வெளியிடப்பட்டது என்பதை அமைச்சர் நினைவு கூர்ந்தார்.
அத்துடன், இந்தியாவுடன் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு ஒத்துழைப்புக்காக சுவீடிஷ் எரிசக்தி நிறுவனம் 4 ஆண்டுகளில் 25 மில்லியனை ஒதுக்கியுள்ளது என்றும் 2018 இல், பிரதமர் நரேந்திர மோடியின் சுவீடன் பயணத்தின் போது, நிலையான எதிர்காலத்திற்கான புதுமை கூட்டுப்பிரகடனத்தின் மூலம் ஒத்துழைப்பை ஆழப்படுத்த இந்தியா ஒப்புக்கொண்டது என்றும் குறிப்பிட்டார்.
கண்டுபிடிப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் இருதரப்பு ஒத்துழைப்பின் தாக்கத்தை அதிகரிப்பதை இந்த கூட்டாண்மை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதோடு இதில் பல பங்குதாரர்களின் பங்கேற்புடன் சமூக சவால்களை கூட்டாக சமாளிக்க வல்ல ஏதுநிலைகள் உருவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் அதன் ஒட்டுமொத்த செயற்திறன் மற்றும் விளைவுகளின் அடிப்படையில் சமீப ஆண்டுகளில் இந்தியா நன்றாக முன்னேறி வருகிறது, உலகளவில் 3ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
இந்தியாவின் வளர்ச்சி வீதம் உலகளாவிய அளவில் சராசரியாக 14சதவீதமாக உள்ளது. காப்புரிமையில் இந்தியா 10 வது இடத்தைப் பெற்றுள்ளது என்றும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
உலகமயமாக்கலுக்கான நிலைமைகளில் எமது ஒத்த எண்ணம் மற்றும் அர்ப்பணிப்பின் பின்னணியில் இருதரப்பு இராஜதந்திர உறவுகள் செழித்துள்ளன என்றும், இந்தியா மற்றும் சுவீடன் இடையேயான இருதரப்பு உறவில் புதுமை ஒத்துழைப்பு மிக வேகமாக வளர்ந்து வருகிறது என்றும் குறிப்பிட்டார்.