இந்தியா மற்றும் பிரித்தானியா இடையே வர்த்தக ஒப்பந்தத்தின் அடுத்த சுற்று பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என்று அந்நாட்டு வர்த்தக அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
பல சிக்கல்கள் தீர்க்கப்படாததால், ஒப்பந்தஇறுதி செய்வதற்கான காலக்கெடுவான ஒக்டோபர் 24ஆம் திகதியில் முடிவுகள் எடுக்கப்படவில்லை.
அத்துடன், பிரித்தானியாவில் அரசியல் நிச்சயமற்ற தன்மை, பொருளாதார மந்தநிலை பற்றிய அச்சமான நிலைமையும் இருதரப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடுவதில் தாமதங்களை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரித்தானியாவின் பிரதமராக பதவியேற்றுள்ள நிலையில், இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் மீண்டும் வேகமெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், குறித்த வர்த்தக ஒப்பந்தத்தை முடிப்பதற்கான திருத்தப்பட்ட காலக்கெடு இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், 2023 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் பேச்சுவார்த்தைகள் இறுதி செய்யப்பட வாய்ப்பில்லை என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தமானது அரசாங்கத்தின் வளர்ச்சி மூலோபாயத்தை ஆதரிக்கிறது, ஒரு சுதந்திர வர்த்தக தேசமாக பிரித்தானியாவின் அந்தஸ்தைப் பயன்படுத்தி, முழு நாட்டுக்கும் பயனளிக்கும் தடையற்ற வர்த்தகத்தை வென்றெடுப்பது அவசியம் என்று அமைச்சர் ஹேண்ட்ஸ் நாடாளுமன்றத்தில் கூறினார்.
அத்துடன், நாங்கள் இரு தரப்பினருக்கும் நன்மைகளை எட்டவல்ல சிறந்த ஒப்பந்தத்தை நோக்கிச் செயற்படுகிறோம். மேலும் பிரித்தானிய மக்கள் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தின் சிறந்த நலன்களுக்காக நியாயமான நிலைமைகள் எட்டப்படும் வரையில் கையெழுத்திட மாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம், இரு நாடுகளும் வணிக வீசாக்கள் மற்றும் இந்தியாவில் இருந்து பிரித்தானியாவுக்கு திறமையான நிபுணர்களை நகர்த்துவது தொடர்பான பிரச்சினைகளை மேற்படி ஒப்பந்தம் குறித்த விவாதங்களின் ஒரு பகுதியாக நடத்தி வருகின்றன.
குறிப்பாக, குடியேற்ற விசாக்கள் குறித்து எந்த விவாதமும் இல்லாதபோதும், பிரித்தானியாவில் அதிக காலம் தங்கியிருக்கும் இந்தியக் குடியேற்றவாசிகள் குறித்து உள்துறைச் செயலர் சுயெல்லா பிராவர்மேனின் சர்ச்சைக்குரிய கருத்துகள் குறித்தும் கவனம் செலுத்தப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
வர்த்தக உடன்படிக்கையானது இரு தரப்பிலும் உள்ள சுங்க மற்றும் கட்டணமற்ற தடைகளை தளர்த்துவதன் மூலம் பொருட்கள் மற்றும் சேவைகளில் அதிக சந்தை அணுகலை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.