போர் விமான நடவடிக்கைகளுக்காக லடாக்கின் அருகில் உள்ள நியோமா மேம்பட்ட தரையிறங்கும் தளத்தை மேம்படுத்துவதற்கான கட்டுமானப் பணிகளை இந்தியா ஆரம்பிக்கவுள்ளது.
லடாக்கின் நியோமா விமானநிலையமானது, சீனாவுடனான தற்போதைய எல்லை முரண்பாட்டுக் காலப்பகுதியில் பொருட்களை கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்பட்டதோடு ஹெலிகாப்டர்கள் மற்றும் சி-130ஆது சிறப்பு செயற்பாட்டு விமானங்கள் தரையிறக்குவதற்கும் பயன்படுத்தப்பட்டது.
இந்நிலையில் விமான நிலையத்தினை மேம்படுத்துவதற்கு தேவையான அனுமதிகள் ஏற்கனவே கிடைத்து விட்டதால், போர் விமான நடவடிக்கைகளுக்கான ஓடுபாதைத் தளங்கள் விரைவில் மறுசீரமைக்கப்படவுள்ளது.
தற்போதைய திட்டங்களின்படி, புதிய விமானநிலைய அமைப்பு மற்றும் எல்லைச்சாலைகளை அமைப்பு, இராணுவ உள்கட்டமைப்பு கட்டுமான மேம்பாடு ஆகியவற்றால் எல்லைகளில் அசம்பாவிதங்களின் போது விரைந்த மற்றும் சிறப்பான பதிலடிச் செயற்பாடுகளுக்கு உதவும் என்று மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிழக்கு லடாக்கில் உள்ள தௌலத் பெக் ஓல்டி, ஃபுக்சே மற்றும் நியோமா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விமான நிலையங்கள் சீனாவின் எல்லையில் இருந்து சில நிமிடங்கள் தொலைவில் உள்ளன.
குறிப்பாக, நியோமா அட்வான்ஸ்ட் லேண்டிங் கிரவுண்ட் என்று அழைக்கப்படும் நியோமா விமானநிலையமானது அப்பாச்சி தாக்குதல் ஹெலிகொப்டர்கள், சினூக் ஹெவி-லிஃப்ட் ஹெலிகொப்டர்கள் மற்றும் எம்.ஐ-17 ஹெலிகொப்டர்களில் இருந்து கருட் சிறப்புப்படை நடவடிக்கைகளின் செயற்பாடுகள் ஆகியவற்றை முன்னெடுக்க வல்லதாக உள்ளது.
அத்துடன் இது எல்லைக்கு அருகாமையில் இருப்பதால் இந்திய பாதுகாப்பு மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.