இந்தியா ஜி-20நாடுகளின் கூட்டுக்கு தலைமைத்துவத்தினை ஏற்றுக்கொண்டமையை முழுமையாக ஆதரிக்கும் அதேவேளையில், மிகப்பெரிய அளவு மற்றும் மக்கள் தொகை இருந்தபோதிலும் இந்தியா எடுத்த உறுதியான சூழல் மற்றும் காலநிலை நடவடிக்கைகளை பாராட்டுவதாக ஜேர்மன் பிரதிநிதிகள் குழு, தெரிவித்துள்ளது.
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், ஜேர்மன் பாராளுமன்ற உறுப்பினர் ஹரால்ட் எப்னர் தலைமையிலான குழுவுடன் புதுடில்லியில் உள்ள இந்திரா பர்யவரன் பவனில் சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.
இந்தக் கூட்டத்தில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான சவால்களை எதிர்கொள்வதற்காக இந்தியாவுக்கு ஜேர்மனி அளித்த ஆதரவை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் நினைவு கூர்ந்ததோடு, கங்கைகள் புத்துயிர் பெறுவதில் ஜேர்மனியின் ஆதரவையும் பாராட்டினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா உள்நாட்டிலும் உலக அளவிலும் பல உறுதியான காலநிலை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் எடுத்துரைத்ததோடு, இந்தியா எப்போதும் தீர்வின் ஒரு பகுதியாக இருக்க முயற்சிக்கிறதே தவிர பிரச்சனையின் பகுதியாக இருக்காது என்றும் அவர் கூறினார்.
சர்வதேச சூரியசக்திக் கூட்டணி, பேரிடர் தாங்கும் உள்கட்டமைப்புக்கான கூட்டணி, மற்றும் தொழில் மாற்றத்திற்கான தலைமைக்குழு போன்றவற்றின் மூலம் உலகளாவிய முயற்சிகளை முன்னெடுத்து, காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் இந்தியாவின் உலகளாவிய உறுதிப்பாட்டை முன்னெடுக்கின்றது என்றார்.
இந்தியாவின் காலநிலை நடவடிக்கைகள் கொள்கையின் அடிப்படையில் அமைந்துள்ளன.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்குகளை இந்தியா மேம்படுத்தியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.
இந்நிலையில், சந்திப்பின் முடிவில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலையில் இந்தோ-ஜேர்மன் இருதரப்பு ஒத்துழைப்பின் பங்களிப்பை ஒப்புக்கொண்டதுடன், அதை மேலும் வலுப்படுத்தவும், மேலும் இரு நாடுகளும் எவ்வாறு இணைந்து செயற்படுவது என்பதை ஆராயவும் ஒப்புக்கொண்டன.