நெதர்லாந்தில் குறைந்தபட்சம் இரண்டு அறிவிக்கப்படாத ‘பொலிஸ் நிலையங்களை’ நிறுவியதாக சீன அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இராஜதந்திர சேவைகளை வழங்குவதற்கான அமைக்கப்பட்டுள்ள ‘வெளிநாட்டு சேவை நிலையங்கள்’ என்ற பெயரிலேயே இந்த பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன.
நெதர்லாந்து வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், அதிகாரப்பூர்வமற்ற பொலிஸ் நிலையங்கள் இருப்பது சட்டவிரோதமானது. அதுகுறித்து உரிய விளக்கங்களைக் கோருவோம் என்றார்.
இந்நிலையில், ஸ்பெயினைத் தளமாகக் கொண்ட அரசார்பற்ற நிறுவனமொன்றின் மூலம், முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சீனா தனது நாட்டு பொதுபாதுகாப்பு பணியகங்களை ஐந்து கண்டங்கள் மற்றும் 21 நாடுகளில் 54 ‘வெளிநாட்டு பொலிஸ் சேவை மையங்கள்’ என்ற பெயரில் நிறுவியுள்ளன.
அவற்றில், ஸ்பெயினில் ஒன்பது கட்டமைப்புக்களும் இத்தாலியில் நான்கும் பிரித்தானியாவில் இரண்டும் கிளஸ்கோவில் ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
நாடுகடந்த குற்றங்களைச் சமாளிப்பதற்கும் சீன ஓட்டுநர் உரிமங்களைப் புதுப்பித்தல் போன்ற நிர்வாகக் கடமைகளை மேற்கொள்வதற்கும் என்ற வெளித்தோற்றத்தில் தான் இந்த அலகுகள் உருவாக்கப்பட்டன.
ஆனால், பாதுகாவலர்களின் கூற்றுப்படி, அவர்கள் ‘வற்புறுத்தல் நடவடிக்கைகளை’ மேற்கொள்கின்றனர் என்று தெரியவந்துள்ளது.
அதாவது, சீன ஆட்சிக்கு எதிராகப் பேசுவதாக சந்தேகிக்கப்படுபவர்களை தாயகம் திரும்பும்படி கட்டாயப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
இவ்வாறான நிலையில், நெதர்லாந்தில் சீன எதிர்ப்பாளரான வாங் ஜிங்யு தன்மை சீனக் காவல்துறையினா பின்தொடர்வதாக அறிவித்துள்ளார். இதனை இந்த ஆண்டின் தொடக்கத்தில், இருந்து அவதானித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இந்த வெளிப்பாடுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, சீன தூதரகம், பொலிஸ் நிலையங்களை எங்கும் அமைக்கவில்லை. அவ்விதமான பொலிஸ் நிலையங்கள் இருப்பது பற்றி எமக்குத் தெரியாது என்று கூறியது.
கடவுச்சீட்டைப் புதுப்பித்தல் அல்லது விசா போன்ற சேவைகள் பொதுவாக சீன தூதரகத்தால் கையாளப்படுகின்றன.
அதேநேரம், நெதர்லாந்து மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளும் கையொப்பமிட்டுள்ள வியன்னா மாநாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, இந்த விடயங்களில் இராஜதந்திர விதிகள் பொருந்தும்.
இதேநேரம், சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் கூறுகையில், வெளிநாடுகளில் உள்ள காவல் நிலையங்கள் ‘வெளிநாட்டில் உள்ள சீன குடிமக்களுக்கான சேவை நிலையங்கள்’ என்றும், மற்ற நாடுகளின் நீதித்துறை இறையாண்மையை சீனா முழுமையாக மதிக்கிறது என்றும் கூறினார்.