மூன்று தினங்களாக இடம்பெற்று வந்த கல்லூண்டாய் போராட்டமானது இன்றையதினம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. ஆனாலும் சட்டரீதியான போராட்டம் தொடரும் என வலி. தென்மேற்கு பிரதேசசபையின் தவிசாளர் அந்தோனிப்பிள்ளை ஜெபநேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,யாழ். மாநகர சபையினர், வலி. தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட கல்லூண்டாய் பகுதியில், யாழ். மாநகரத்தில் சேரும் கழிவுகளை கடந்த 30 வருடங்களாக கொட்டிவந்தனர்.
தற்போது மானிப்பாய் பிரதேச சபையினர் (வலி. தென்மேற்கு) தற்போது, விலங்கு மற்றும் தாவரக் கழிவுகளை சேகரித்து சேதனப் பசளையினை உற்பத்தி செய்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் மாநகரசபையின் கழிவுகளையும் தம்மிடம் தருமாறு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் எழுத்து மூலமாக, யாழ். மாநகர சபையிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்தனர்.
இந்நிலையில் மாநகரசபையினர் “நாங்களும் சேதனப் பசளை உற்பத்தி செய்து வருகிறோம்.
எங்களிடம் சேரும் கழிவுகள் எமது உற்பத்திக்கே போதுமானதாக இல்லை. எனவே எங்களிடம் சேரும் கழிவுகளை வழங்க முடியாது” என கூறியுள்ளனர்.
ஆனால் அவர்கள் சேதனப் பசளை உற்பத்தி செய்யவும் இல்லை, குப்பைகளை தரம்பிரித்து கொட்டவுமில்லை என பிரதேச சபையினர் குற்றம் சாட்டியுள்ளனர். அங்கு சென்று பார்த்தவேளை பொலுத்தீன், பிளாஸ்டிக், விலக்கு கழிவுகள் மற்றும் தாவரக் கழிவுகள் என்பன ஒன்றாக கொட்டியிருப்பதை அவதானிக்க முடிந்தது.
இந்நிலையில் நேற்றையதினம் யாழ். மாநகர சபையினர் மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த நிலையில் நீதிமன்றம் இவ்வாறு போராட்டத்திற்கு இடைக்கால தடை விதித்துள்ளது.
இதனையடுத்து தமது போராட்டம் சட்ட ரீதியாகவும் வேறு விதமாகவும் தொடரும் என மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.