இழப்பீட்டு பணியகம் ஊடாக ஆயிரத்து 753 குடும்பங்களுக்கு இதுவரை இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது உரையாற்றிய அவர், “காணாமல்போனோர் அலுவலகத்தின் பணிகளை வேகமாக முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இறுதிப்படுத்தப்பட்ட ஆயிரத்து 653 ஆவணங்கள் இதுவரை எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.
அத்துடன், இழப்பீடு தொடர்பான விசாரணைகளின் பிரகாரம் ஆயிரத்து 753 குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
3 ஆயிரத்து 320 ஆவணங்களுக்கு (குடும்பங்களுக்கு) இழப்பீடு வழங்கப்படவுள்ளது. அதேபோல 5 ஆயிரத்து 246 ஆவணங்கள் எஞ்சியுள்ளன.
இந்தியாவில் இருந்து 11 ஆயிரத்து 780 பேர் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர். இவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல போதைப்பொருள் ஒழிப்பு சம்பந்தமாக 9 மாகாணங்களிலும் செயலணி உருவாக்கப்படும். இதன் முதற்கட்டமாக வடக்கில் ஆளுநர் தலைமையில் நிறுவப்பட்டுள்ளது.“ எனத் தெரிவித்துள்ளார்.