கசினோ வியாபாரத்தை ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் மற்றும் கசினோ வியாபாரத்தை ஒகுங்குபடுத்தல் சட்டமூலத்தின் விதிமுறைகளுக்கு இரண்டு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, அரச நிதிக்குழுவின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினருமான ஹர்ஷடி சில்வா தெரிவித்துள்ளார்.
நேற்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் அரச நிதிக்குழுவின் அறிக்கையை சபைக்கு சமர்ப்பித்து கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நாட்டில் கசினோ சூதாட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்கும் அதனை கண்காணிப்பதற்கும் 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் திகதிக்கு முன்னர் கசினோ ஒழுங்குபடுத்தல் அதிகார சபை அமைப்பதாக வழங்கப்பட்ட வாக்குறுதியின் அடிப்படையிலும் அரசாங்கத்தின் தேவையை கருத்தில் கொண்டும் இரண்டு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அவர்களின் இந்த வாக்குறுதியை எழுத்து மூலம் தாம் பெற்றுக்கொண்டுள்ளதாகவும், நடவடிக்கையை மேற்கொள்கின்றார்களா எனப் பார்ப்பதற்காக மாதாந்தம் அதன் முன்னேற்ற நடவடிக்கை தொடர்பில் கண்காணித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், உலகில் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் கீழே கசினோ நிறுவனங்கள் கண்காணிக்கப்படுகின்ற போதும், இலங்கையில் அவ்வாறான அதிகாரசபை இல்லை என்பதால், முன்னதாக இரண்டு தடவைகள் குறித்த சட்டமூலத்துக்கு அனுமதி வழங்குவதை மறுத்துள்ளதாகவும் இதன்போது அவர் சுட்டிக்காட்டினார்.