மீண்டும் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதைத் தவிர மாற்று வழியில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நிதி பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சு, முதலீட்டு மேம்பாட்டு அமைச்சுக்களுக்கான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு நாடாளுமன்றத்தில் வரவு செலவு திட்டம் மீதான நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு விளக்கமளித்து உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
இந்த வருடத்தில் மாத்திரம் இலங்கை மின்சார சபை 152 பில்லியன் ரூபாய் நட்டமடைய உள்ளதாகவும் 2013ஆம் ஆண்டில் இருந்து இதுவரையில் 300 பில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
அரசாங்கத்துக்கென வருமானம் இல்லாத நிலையில் இந்த பாரிய நிதியை எவ்வாறுப் பெற்றுக்கொள்ள, ஒரே தீர்வு மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது மட்டுமே என அவர் சுட்டிக்காட்டினார்.
மின்கட்டணத்தை அதிகரிக்காது மின்சாரத் துண்டிப்புகளுக்கு செல்லலாம் என்ற போதிலும், அதில் தனக்கு உடன்பாடு இல்லை என ஜனாதிபதி தெரிவித்தார்.