கிராஞ்சி கடலட்டைப் பண்ணைகள் குறித்தும், அதற்கு எதிராக, மேற்கொள்ளப்படுகின்ற போராட்டம் தொடர்பாகவும் உண்மை நிலைவரங்களை ஆராயாமல் கருத்துக்களை வெளியிட வேண்டாம் என கிராஞ்சி கடற்றொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிராஞ்சி ஸ்ரீ முருகன் கடற்றொழிலாளர் சங்கத்தின் செயலாளர் த. மகேந்திரன், கிளிநொச்சியில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “சுமார் 266 இற்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்ற கிராஞ்சிக் கிராமத்தில் 203 இற்கும் மேற்பட்ட கடற்றொழிலாளர்கள், சம்மந்தப்பட்ட திணைக்களிடம் விண்ணப்பித்து விட்டு நீண்ட நாட்களாக காத்திருக்கின்றோம்.
இவ்வாறு விண்ணப்பித்து இருக்கின்றவர்களுள் 40 கடற்றொழிலாளர்களினால் 40 பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பண்ணை அமைத்துள்ளவர்கள், பாரம்பரியமாக தாங்கள் சிறகு வலைத் தொழிலை மேற்கொண்டு வந்த இடங்களிலேயே பண்ணைகளை அமைத்துள்ளனர்.
இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள பண்ணைகளையே சட்டவிரோதப் பண்ணைகளாக சிலரினால் சுட்டிக்காட்டப்படுவதுடன், அதனை அகற்றுமாறு போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
குறித்த பண்ணைகள் தங்களினால் பாரம்பரியமாக சிறகு வலைத் தொழில் மேற்கொள்ளப்பட்டு வந்த கடல் பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருப்பதாகவும் இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த விடயத்தில் அக்கறை செலுத்துகின்றவர்கள் யாராக இருந்தாலும், நேரடியாக வந்து ஆய்வுகளை மேற்கொண்டால் உண்மைகளை அறிந்து கொள்ள முடியும்.
எம்மால் அமைக்கப்பட்டிருக்கின்ற கடலட்டைப் பண்ணைகள் அனுமதி பெற்றுக்கொள்ளப்படாத சட்டவிரோதப் பண்ணைகள் என்று தெரிவிக்கின்றவர்கள், தாங்கள் மேற்கொண்டு வருகின்ற சிறகுவலைத் தொழிலை எந்தவிதமான அனுமதிகளையும் பெற்றுக்கொள்ளாமல் சட்டவிரோதமாகவே மேற்கொண்டு வருகின்றனர்.
அதைவிட, எமது பண்ணைகளுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூவரில் ஒருவர் பிணாமியின் பெயரில் பாரிய கடலட்டைப் பண்ணையை செயற்படுத்தி வருகின்றார் என்ற உண்மையையும் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். அதனை நிரூபிப்பதற்கான ஆவணம்கூட எம்மிடம் இருக்கின்றது.
ஆக, கடந்த காலங்களில் எமது பகுதியில் தொழில்சார் ஆதிக்கத்தினை செலுத்தி வந்த சிலர், தமது குடும்பங்களின் ஆதிக்கத்தினை தக்கவைத்துக் கொள்வதற்காக, மக்களையும் அரசியல் தலைவர்களையும் திசை திருப்பும் வகையில் ஆநீதியான முறையில், கிராஞ்சி கடற்றொழிலாளர்கள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது போன்ற தோற்றத்தினை ஏற்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறான பொய்ப் பித்தலாட்டங்களை நம்பிய சிலர், அவர்களுக்கு ஆதரவாக தவறான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். வீதியில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபடுவதன் மூலமே, எமது நியாயமான கோரிக்கைகளுக்கும் யாரையும் பாதிக்காத எமது வாழ்வாதாரத்திற்கும் அனைவரினதும் ஆதரவு கிடைக்குமாயின்,
எம்மால் 800 இற்கும் மேற்பட்ட கிராஞ்சி மக்களை ஒன்றுதிரட்டி போராட்டத்தினை முன்னெடுக்க முடியும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்” என்று தெரிவித்தார்