இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை எதிர்வரும் ஜனவரி மாதம் 26ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மனு இன்று காலை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே வாதத்திற்கான திகதி தீர்மானிக்கப்பட்டது.
இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நவம்பர் 15ஆம் திகதி நீக்குமாறு செயற்பாட்டாளர் ஓஷல ஹேரத்தால் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.
இராஜாங்க அமைச்சர் கமகே, குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர், பொது பாதுகாப்பு அமைச்சர், சமகி ஜன பலவேகயவின் பொதுச் செயலாளர், தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற பொதுச் செயலாளர் ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பிரித்தானிய குடியுரிமை பெற்றுள்ளதாகவும், நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம், அத்தகைய நபர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க தகுதியற்றவர் எனவும் மனுதாரர் கோரியுள்ளார்.
எனவே, இராஜாங்க அமைச்சர் கமகே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்கத் தகுதியற்றவர் என அறிவித்து, அதனை இரத்துச் செய்து ஆணை பிறப்பிக்குமாறு ஓஷல ஹேரத் மேன்முறையீட்டு நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.