இந்திய கடனுதவித் திட்டத்தின் கீழ் 370 வகையான மருந்துகளை இலங்கைக்கு பெற்றுக்கொடுப்பதற்கு இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படவுள்ள குறித்த 370 வகை மருந்துப் பொருட்களும் அடுத்த மாதம் நாட்டை வந்தடையும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டுக்கு மிக அத்தியாவசியமான 14 வகை மருந்துகளில் ஏழு வகை மருந்துகளை ஒருவருட தேவைக்காக இலங்கைக்கு வழங்குவதற்கு சீன அரசாங்கம் பொறுப்பேற்றுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, சீனாவிலிருந்து கிடைக்கப்பெறும் மேற்படி மருந்துப்பொருட்கள் விரைவில் நாட்டுக்கு கிடைக்குமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் மருந்துகள் தொடர்பில் சிலசில அசௌகரியங்கள் நிலவுவதை தாம் ஏற்றுக்கொள்வதாக குறிப்பிட்டுள்ள அமைச்சர், எவ்வாறாயினும் மருந்துப்பொருள் இறக்குமதியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த முடியுமானளவு அதனை முறையாக முன்னெடுத்துச் செல்ல முடிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மருந்துப் பொருட்கள் தொடர்பில் எத்தகைய தகவல்களையும் மறைப்பதில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ள அவர் அனைத்து தகவல்களையும் நாடாளுமன்றத்திற்கு தெளிவுபடுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இலங்கைக்கு தேவையான அனைத்து மருந்துகள் தொடர்பான பட்டியலொன்றை இலங்கையிலுள்ள இந்திய தூதரகத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.