‘சீனா இலங்கையின் உண்மையான நண்பன் அல்ல. அது ராஜபக்ஷக்களுக்கு வேண்டுமானால் நல்ல நண்பர்களாக இருக்கலாம். சீனா ஊழல் மோசடிகள் இடம்பெறுவதற்கு இடமிக்கிறது.
இலட்சம் வழங்குவதற்கு முனைகிறது. உய்குர் முஸ்லிம்களை புனர்வாழ்வு என்ற பெயரில் சிறைவாழ்வுக்கு உட்படுத்தியுள்ளது’ என நாடாளுமன்றத்தில் வரவு, செலவுத்திட்ட விவாதத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குறிப்பிட்டிருந்தார்.
அதேநேரம், ’20ரில்லியன் டொலர்கள் அந்நியச் செலாவணி இருப்பைக் கொண்டுள்ள சீனா, 7.4 பில்லியன் டொலர்கள் கடன் செலுத்த வேண்டிய இலங்கை விடயத்தில் இறுக்கமாக இருக்கின்றது.
22 மில்லியன் மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடன் மறுசீரமைப்பு விடயத்தில் சீனா இலங்கைக்கு உதவி செய்ய வேண்டும். அவ்வாறு இல்லையேல் ‘கோ ஹோம் சீனா’ போராட்டம் ஆரம்பமாகும்’ என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
சாணக்கியனின் இந்தக் கருத்துக்கள் சீனாவிற்கு நிச்சயமாக சினமூட்டியிருக்கும் என்பதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால் இலக்கையின் சீன தூதரகம் உடனடியாகவே டுவிட்டரில் பிரதிபலிப்பைச் செய்திருந்தது.
இதனையடுத்து, சீனாவுக்கும், பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கும் இடையிலான கருத்து முரண்பாடுகள் சாணக்கியன் என்ற தனிநபர் நலன் சார்ந்தது, சாணக்கியன், சீனாவைத் தாக்குவதால் அவர் இந்தியா அல்லது அமெரிக்க பின்னணியைக் கொண்டிருக்கலாம் என்றெல்லாம் பல ஊகங்கள் வெளிப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
ஆனால், இங்கு முக்கியமானதொரு விடயம், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனா இன்னமும் வெளிப்படையான நிலைப்பாட்டை அறிவிக்காத நிலைமைக் காரணத்தை கூறுவதாக இல்லை.
இந்த நிலைமையானது, மறைமுகமாக, சீனா இலங்கையை தன்னுடைய பிடிக்குள் வைத்துக்கொள்ளும் ஒரு உபாயத்தினை அடிப்படையாகக் கொண்டது என்றே கருத வேண்டியுள்ளது.
குறிப்பாக, கூறுவதாக இருந்தால் ‘கடன்பொறி’ என்ற இராஜதந்திரத்தினை இலங்கை விடயத்தில் நடைமுறைச்சாத்தியமாக்கவே சீனா எத்தணிக்கின்றது என்பது அப்பட்டமாகத் தெரிகின்றது.
அவ்வாறு இல்லாது விட்டால், 2.9பில்லியன் டொலர்களை சர்வதேச நாணயநிதியம் இலங்கைக்கு வழங்குவதற்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில் அதன் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் விரைந்து முடிவெடுங்கள் என்று இறுதியாக நடைபெற்ற சீன தரப்புடனான சந்திப்பின்போது வலியுறுத்தவேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காது அல்லவா?
மேலும், இந்தியா, யப்பான், சர்வதேச நாணயநிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஐரோப்பிய ஒன்றியம், பாரிஸ் கிளப் உள்ளிட்ட சகல நாடுகளும் கடன்மறுசீரமைப்பு பச்சைக்கொடி காட்டியுள்ளதோடு, அதற்கான ஆயத்தங்களையும் செய்துவரும் நிலையில் சீனா மௌனமாக இருப்பதன் பின்னணி என்ன?
சீனா, இலங்கையின் உண்மையான நண்பன் என்றால் நிச்சயமாக அந்த நாடு தான் தானாக முன்வந்து முதல்நாடாக கடன்மறுசீரமைப்பு தொடர்பில் பகிரங்க அறிவிப்பைச் செய்திருக்க வேண்டும்.
ஆனால் சொற்பமான தொகைகளை வழங்கிய ஏனைய நாடுகள் கடன் மறுசீரமைப்புக்கு முன்வந்திருக்கின்றபோதும் சீனா மௌனமாக இருக்கின்றது.
ஆகக்குறைந்தது, இலங்கையின் தற்போதைய அரசாங்கத்துடன் கடன்மறுசீரமைப்பு குறித்த தூதரக மட்டப்பேச்சுவார்த்தைகளையே முன்னெடுக்கது அமைதி காக்கின்றமை பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவே உள்ளது.
அந்த அடிப்படையில், சீனா தொடர்பில் சாணக்கியன் தெரிவித்த கருத்துக்கள் நியாயமானதாகவே உள்ளன.
ஆனால், அதற்குப் பின்னரும் கூட சீனா சாணக்கியனுக்கு எதிராக போராட்டங்களையும், டுவிட்டர் பதவிகளையும் செய்து பதிலடி வழங்க முனைகின்றதே தவிர கடன்மறுசீரமைப்பு தொடர்பில் மௌனம் கலைப்பதற்கு தயாராகவே இல்லை.
அதேநேரம், இந்தியாவின் வாழ்வாதார உதவிகளால் இலங்கையின் வரிசையுகம் நிறைவுக்கு வந்திருந்தாலும் அன்றாட வாழ்வாதரத்தினை முன்னகர்த்துவதில் மக்கள் நெருக்கடிகளில் உள்ளனர்.
குறிப்பாக, தமது பெறுமதியான பொருட்களை விற்பனை செய்து வாழ்வாதாரத்தினை முன்நகர்த்தும் நிலைமையில் உள்ளதாக, உலக உணவுத்திட்டத்தின் ஒக்டோபர் மாத கள அறிக்கை கூறியுள்ளது.
அதன்பின்னர், அந்த நிலைமையில் மாற்றம் ஏற்படுவதாக இருந்தால் நிச்சயமாக மேலும் தாழ்நிலைக்கே நிலைமைகள் சென்றிருக்குமே தவிரவும், மேம்பட்டிருக்க வாய்ப்புக்கள் எதுவுமே காணப்பட்டிருக்கவில்லை.
இவ்வாறு இலங்கையில் அன்றாடாவாழ்வாதரத்திற்காக சாதாரண மக்கள் தத்தளிக்க ஆரம்பித்துள்ள நிலையில் இலங்கையின் உண்மையான நண்பன் என்று கூறும் சீனா கடன்மறுசீரமைப்பு விடயத்தில் இன்னும் மௌமாகவே இருப்பது ஏன்?
-யே.பெனிற்லஸ்-