யாழ்ப்பாண பல்கலைக்கழகம் தமிழர்களின் தனிப்பெருமைகளுக்கு உரமூட்டுகின்ற ஒரு அறிவியல் சமுத்திரம். தமிழின விடுதலையில் யாழ்.பல்கலைக்கழகத்தின் பங்களிப்பானது அளப்பெரியது.
தற்போதும், தமிழ் மக்களின் எதிர்காலத்தினை தீர்மானிக்கவல்ல சக்தியை யாழ்.பல்கலைக்கழகம் கொண்டிருக்கின்றது. இந்த நிலைமை எதிர்காலத்திலும் நீடிக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
குறிப்பாக, தற்போதும் கூட தமிழ் மக்களின் பாரம்பரிய பூமியான வடக்கு, கிழக்கில் இடம்பெறுகின்ற பல்வேறு பட்டவிதமான அரசாங்க ஆக்கிரமிப்புக்கள் உள்ளிட்ட செயற்பாடுகளை தடுப்பதற்கான முழுமையான பிரயத்தனங்களையும் யாழ்.பல்கலைக்கழகம் முன்னெடுக்கின்றது என்பது வெளிப்படையானது.
அந்தவகையில், வடக்கு, கிழக்கில் அண்மைக்காலமாக சிங்கள, பௌத்த தேசியவாத ஆக்கிரமிப்புக்கு அப்பால் சீனா மற்றும் அதன் நட்பு நாடுகளான பாகிஸ்தான் ஆகியவற்றின் பிரசன்னமும், ஆக்கிரமிப்புக்களைச் செய்வதற்கான ஆரம்ப கட்டச் செயற்பாடுகளும் வெகுவாகவே முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த நிலையில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களே, அந்நிய தேசத்தின் ஆக்கிரமிப்புக்களை தடுப்பதற்கு தாமாக முன்வந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து அதில் வெற்றியும் கண்டிருக்கின்றார்கள்.
முன்னதாக, சீன அரசாங்கம் தமாகவே முன்வந்து 43,லட்சம் ரூபாவை யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் நலன்களை அடிப்படையாக வைத்து தனது தூதரகத்திற்கு துணைவேந்தர் சிறீசற்குணராஜாவை அழைத்து வழங்கியிருந்தது.
இந்தச் செயற்பாடானது, யாழ்.பல்கலைகழக கல்வியலாளர்கள் சமூகம் உட்பட மாணவர்கள் ஒன்றியத்தினால் கடுமையான கண்டிக்கப்பட்டு விமர்சனத்திற்கும் உள்ளானது.
இவ்வாறான நிலையில், சீனாவின் நோக்குகள் தொடர்பில் விழிப்படைந்த மாணவர்கள் மீண்டுமொரு விழிப்புணர்வு அறிக்கையை வெளியிட்டார்கள்.
குறித்த அறிக்கையில் கடலட்டைப் பண்ணைகள் ஊடாக வடக்கில் உள்ள கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை வெளிப்படுத்தினார்கள்.
அதில் குறிப்பாக, சீனாவின் அணுகுமுறையின் அடிப்படையில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள வளமான விவசாய நிலங்களையும் கடற்பரப்பையும் சீனாவுக்கு விற்பதற்கு இலங்கை அரசாங்கம் ஏற்கனவே சீனாவுடன் இரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டதாக நாங்கள் சந்தேகிக்கிறோம்.
எமது நிலங்களையும் கடலையும் மக்களின் விருப்பத்திற்கு மாறாக சீனாவிற்கு விற்க பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களை அரசாங்கம் செய்து வருகிறது இவற்றை அனுமதிக்க முடியாது என்றும் குறித்த அறிக்கையில் வெளிப்படுத்தியிருந்தார்கள்.
அதுமட்டுமன்றி, நிலங்ளையும், கடலையும் பாதுகாப்பதற்காக தாம் போராடுவதற்கும் தயங்கப்போவதில்லை என்ற தகவலையும் மிகவும் வெளிப்படையாக கூறியிருந்தார்கள்.
இவ்வாறான பின்னணியில் தான், சீனத் தூதரகம் யாழ்.பல்லைகழக்துடன் ஒப்பந்தமொன்றைச் செய்வதற்கு அழுத்தங்களை அளித்து வந்தது. எனினும், துணைவேந்தர் சிறிசற்குணராஜாவின் தற்துணிவால் அந்த முயற்சி தடுக்கப்பட்டுள்ளது.
சீன அரசாங்கத்தினால் சீன விவசாயப் பல்கலைக்கழகத்திற்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம், இலங்கை அரசாங்கத்தின் மறைமுக ஆதரவுடன் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்ட நிலையிலேயே மாணவர்கள் மற்றும் துணைவேந்தர் உள்ளிட்ட கல்விச் சமூகத்தினால் தடுக்கப்பட்டுள்ளது.
இதன்மூலமாக, சீனா வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள வளமான விவசாய நிலங்களை, தமது நாட்டில் பத்து ஆண்டுகளில் ஏற்பட இருக்கும் மிக கடுமையான உணவு பஞ்சத்தை சமாளிக்கும் பொருட்டு தீய எண்ணத்துடன் கைப்பற்ற எடுக்கப்பட்ட முயற்சி தடுக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி, ஏற்கனவே, சீனா, இலங்கைக்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களுடன் கூடிய உரத்தை வழங்குவதற்கு முற்பட்டு பின்னர் அதனை இலங்கை அரசாங்கம் ஏற்க மறுத்தமையால் அதற்காக 6மில்லியன்களை நட்டத்தொகையாக பெற்றுச்சென்றதையும் இந்த இடத்தில் மீட்டிக்கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.
அந்தவகையில்,பல்கலைக்கழக சமூகம் சீனாவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை கைவிட்டமையானது வரவேற்கத்தக்கதாகும். இதனைவிடவும், சீனாவைப் பொறுத்தவரையில் ஆரம்பத்திலிருந்து தற்போது வரையில் தமிழர்கள் மீது உண்மையான கரிசனை கொண்டதாக இல்லை.
போரின்போது ஆயுதரீதியான உதவிகளை இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கியிருந்தது. அதனால் பாரிய அளிவில் மனித உரிமைகள் மீறப்பட்டன. அவ்வாறு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான நீதியைக் கோரி தமிழ் மக்கள் ஜெனிவாவில் காத்திருக்கின்றனர்.
ஆனால், சீனா ஒவ்வொரு ஆண்டும், பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் ஐ.நாவின் தீர்மானங்களை எதிர்த்தே வாக்கின்றது, குறிப்பாக இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவளித்தே வருகின்றது.
அவ்வாறான சீனாவிற்கு தீடீரென்று யாழ்.பல்கலைக்கழத்தின் மீதும், தமிழ் மக்கள் மீதும் கரிசையும், பற்றும் ஏற்படக் காரணம் தான் என்பதற்கு உரியவாறான பதிலில்லை. ஆகவே, பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் தீர்மானமும் செயற்பாடும் சாலச்சரியானதே என்றே அரசியல் அவதானிகள் பலரும் குறிப்பிடுகின்றனர்.