யாழ்.மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பு இன்று(புதன்கிழமை) இடம்பெறவுள்ள நிலையில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று மாலை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மாநகர சபை உறுப்பினர்களுக்கும் கட்சித் தலைமைக்கும் இடையிலான கலந்துரையாடலின்போதே வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்.மாநகர சபையின் முன்னாள் முதல்வரின் இரண்டு வரவு செலவுத் திட்டங்கள் தோற்கடிக்கப்பட்டமையினால் புதிய முதல்வர் தெரிவு இடம்பெற்ற நிலையில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் பூரண ஆதரவுடன் யாழ் மாநகர முதல்வராக மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி 2023 வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
45 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் யாழ்.மாநகர சபையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் 16 உறுப்பினர்களும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சார்பில் 13 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் 10 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 3 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் 2 உறுப்பினர்களும், தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் ஒரு உறுப்பினரும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.