சுதந்திர தினத்துக்கு முன்னர் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளமை தமிழ் மக்களை ஏமாற்றும் செயற்பாடு என உதய கம்மன்பில தெரிவித்தார்.
இனப் பிரச்சினைக்கு தீர்வு காண தென்னிலங்கை அரசியல்வாதிகள் இடமளிக்கவில்லை என்ற நிலைப்பாட்டை தோற்றுவித்து, நாட்டின் நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தவே அவர் முயற்சி செய்கின்றார் என்றும் குற்றம் சாட்டினார்.
எனவே சுதந்திர தினத்துக்கு முன்னர் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளமை நகைப்புக்குரியது என்றும் கட்சித் தலைவர் கூட்டத்திலேயே மாறுபட்ட பல கருத்துக்களை தமிழ் தரப்பினர் முன்வைத்துள்ளனர் என்றும் சுட்டிக்காட்டினார்.
அரசியல் தீர்வு விவகாரத்தில் தமிழ் அரசியல் கட்சிகளிடம் முதலில் ஒற்றுமை கிடையாது என்றும் சமஷ்டி அடிப்படையிலான தீர்வு சாத்தியமற்றது என்றும் உதய கம்மன்பில தெரிவித்தார்.
குறுகிய அரசியல் நோக்கத்துக்காக பிற்போடப்பட்டுள்ள மாகாண சபை தேர்தலை நடத்தினால், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் பாதுகாக்கப்படும் என உதய கம்மன்பில குறிப்பிட்டார்.
முன்னதாக இனப்பிரச்சினைக்கு தீர்வினை காண்பதற்கு அரசாங்கம் எடுத்திருக்கும் முயற்சியை கடுமையாக எதிர்த்த அவர் தமிழர்களுக்கு தீர்வை வழங்குவது பைத்தியக்காரத்தனம் எனவும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.