நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல் ஜூலை மாதம் வரை இடம்பெற்ற பல்வேறு வன்முறை சம்பவங்கள் தொடர்பிலான விசாரணை அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு ஆளும்கட்சி ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த சம்பவங்கள் தொடர்பாக ஆராய முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னகொட தலைமையில் முன்னாள் விமான படைத்தளபதி ரொஷான் குணதிலக மற்றும் முன்னாள் இராணுவ தளபதி தயா ரத்னாயக்க உள்ளிட்ட குழுவை கோட்டாபய ராஜபக்ஷ நியமித்தார்.
இவர்கள் மிரிஹான போராட்டம், காலிமுகத்திடல் மற்றும் அலரிமாளிகை போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல், அமரகீர்த்தி அதுகோரல படுகொலை, நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
மேலும் ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றியமை, ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு தீ வைத்தமை உள்ளிட்ட சம்பவங்கள் குறித்தும் ஆராய்ந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
இந்நிலையில் இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையை நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 107 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளனர்.