இலங்கை சனத்தொகையில் 52 வீதமானோர் பெண்களாக இருந்தும் நாடாளுமன்றத்தில் 5 சதவீத பெண் பிரதிநிதித்துவம்கூட இல்லை. இந்த நிலைமை மாற வேண்டும். என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சர்வதேச விவகாரங்களுக்கான பொருப்பாளரும், இ.தொ.காவின் உப தலைவருமான பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.
இன்று (சனிக்கிழமை) பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான தெளிவூட்டல் பயிற்சி பட்டறை கொட்டகலை சீ.எல்.எப் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் “இன்றைய நவீன உலகை எடுத்துக்கொண்டால் வளர்ச்சியடைந்த பல நாடுகளிலும் பெண்கள் முக்கிய பதவிகளில் இருக்கின்றனர். அவர்களுக்கு உரிய இடம் வழங்கப்படுகின்றது. எமது நாட்டில் முன்னேற்றகரமான நிலைமை இல்லை.
எமது நாட்டில் இருந்துதான் உலகில் முதலாவது பெண் பிரதமர் நியமிக்கப்பட்டார். இப்படிபட்ட எமது நாட்டில் இன்று சபாநாயகர் பதவிக்குகூட பெண்ணொருவர் தெரிவுசெய்யப்படுவதில்லை என்பது வேதனைக்குரிய விடயமாகும்
இந்நிலைமை மாற வேண்டும் .தேர்தல்களின் போது வேட்பாளர் பட்டியலில் 25 வீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வந்தாலும் அத்திட்டம் நடைமுறையில் இல்லை.
எனவே அது கட்டாய சட்டமாக்கப்பட வேண்டும். அப்போதுதான் பெண்களுக்கு உரிய இடம் கிடைக்கும். மாறாக மகளிர் தினத்தன்று மட்டும் மகளீரை போற்றுவதால் மாற்றம் வரப்போவதில்லை.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.