இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றது.
நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற இந்த சந்திப்பில், இலங்கையின் பால் உற்பத்தி மற்றும் இது தொடர்பாக இந்தியாவுடனான சாத்தியமான ஒத்துழைப்புகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
தேசிய பால் உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் இந்தியாவின் தேசிய பால் அபிவிருத்தி சபை மற்றும் அமுல் பால் நிறுவனத்துடன் இணைந்து இலங்கையில் திரவ பால் உற்பத்திக்கு தேவையான தொழில்நுட்ப ஆதரவை வழங்குவது குறித்து கலந்துரையாடப்பட்டது.
அதற்கிணங்க, இலங்கையை நீண்டகாலமாக பால் மற்றும் பால் உற்பத்திகளில் தன்னிறைவு அடையச் செய்வதுடன், உள்ளூர் பால் உற்பத்தியை இரட்டிப்பாக்க குறுகிய மற்றும் நடுத்தர கால இலக்குகளை வழங்குவதே இதன் நோக்கமாகும்.
நாட்டின் பால்பண்ணைத் துறையின் அபிவிருத்திக்காக குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட காலத் திட்டத்தைத் தயாரிப்பதற்காக இந்தியாவின் தேசிய பால் அபிவிருத்தி சபையின் பல்துறைக் குழுவுடன் இணைந்து பணியாற்றுவதற்காக அரச மற்றும் தனியார் துறைகளின் பிரதிநிதிகளைக் கொண்ட குழுவொன்று ஜனாதிபதி விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டது.
மேற்படி குழுவின் உறுப்பினர்கள் மற்றும் இந்தியாவின் தேசிய பால் அபிவிருத்தி சபையின் பல்துறைக் குழு, இந்தியாவின் பிரதிநிதிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.