வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் ‘ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெற முடியாத சமஸ்டியை வலியுறுத்துவதற்கு’ அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் ஓரணியில் திரண்டு செயல்படக் கோரி வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களை ஒன்றிணைத்து கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
‘ஒன்றிணைவோம் ஒருமித்த குரலில் உரக்கச் சொல்வோம்’ எனும் தொனிப் பொருளில் நேற்று (வியாழக்கிழமை) தொடக்கம் எதிர்வரும் 10ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள 8 மாவட்டங்களிலும் ஒரே நேரத்தில் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த நிலையில் மன்னாரில் 2 ஆம் நாள் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (வெள்ளிக்கிழமை)காலை 10 மணியளவில் மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் ஆரம்பமானது.
வடக்கு- கிழக்கில் உள்ள சிவில் அமைப்புகள், பாதிக்கப்பட்ட மக்கள்,கல்விமான்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் இளைஞர்கள் ஆகியோரை ஒன்றிணைத்து குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை குறித்த போராட்டம் இடம் பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.