இலங்கையில் போதைப்பொருள் தடுப்புக்காக பூரண அதிகாரம் கொண்ட செயலகத்தை நிறுவுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
இது தொடர்பான கலந்துரையாடல் பாதுகாப்பு திணைக்களத் தலைவர்களின் பங்குபற்றுதலுடன் கடந்த வாரம் செவ்வாய்கிழமை பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது.
போதைப்பொருள் தடுப்புக்கான ஜனாதிபதி செயலணியை பலப்படுத்துவதற்காக இந்த விசேட அலுவலகம் நிறுவப்பட உள்ளது.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விசேட சட்டத்தின் கீழ் அது தொடர்பான அதிகாரங்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
போதைப்பொருள் நாட்டிற்குள் பிரவேசிப்பதைத் தடுப்பதற்கும், விற்பனையாளர்களை சிக்க வைப்பதற்கும் தனியான பாதுகாப்புப் பிரிவொன்றை ஸ்தாபித்தல் போன்ற விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த அலுவலகம் ஸ்தாபிக்கப்படவுள்ளது.
இதற்கமைய, இது தொடர்பான அதிகாரங்கள் தொடர்பாக ஜனாதிபதியின் பாதுகாப்பு அலுவல்கள் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்கவின் தலைமையில் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.













