மெக்ஸிகன் போதைப்பொருள் மன்னன் எல் சாப்போவின் மகனைக் கைது செய்வதற்கான நடவடிக்கையின் போது குறைந்தது 29பேர் உயிரிழந்ததாக மெக்ஸிகோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
32 வயதான ஓவிடியோ குஸ்மான்-லோபஸ், குலியாகனில் கைது செய்யப்பட்டார். ஆனால், அவர் கைது செய்யப்பட்ட போதும் அதற்குப் பின்னரும் 10 படையினரும் 19 சந்தேக நபர்களும் கொல்லப்பட்டனர்.
ஓவிடியோ குஸ்மான்-லோபஸ் கைது செய்யப்பட்டதால், ஆத்திரமடைந்த அவர் கும்பல் உறுப்பினர்கள் வீதித் தடுப்புகளை அமைத்து, டசன் கணக்கான வாகனங்களுக்கு தீ வைத்தனர் மற்றும் உள்ளூர் விமான நிலையத்தில் விமானங்களைத் தாக்கினர்.
மேலும் 35 இராணுவ வீரர்கள் காயமடைந்தனர் மற்றும் 21 ஆயுததாரிகள் கைது செய்யப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சர் லூயிஸ் கிரெசென்சியோ சாண்டோவல் தெரிவித்தார்.
‘தி மவுஸ்’ என்ற புனைப்பெயர் கொண்ட குஸ்மான்-லோபஸ், ஹெலிகொப்டர் மூலம் அதிகபட்ச பாதுகாப்புடன் ஃபெடரல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். உலகின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் அமைப்புகளில் ஒன்றான தனது தந்தையின் மோசமான சினலோவா கார்டெல்லின் ஒரு பிரிவை வழிநடத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவரது தந்தை, ஜோவாகின் ‘எல் சாப்போ’ குஸ்மான், 2019ஆம் ஆண்டில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பணமோசடி ஆகியவற்றில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பின்னர் அமெரிக்காவில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். அவரது விசாரணையில் மெக்ஸிகோவின் போதைப்பொருள் விற்பனையாளர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பது பற்றிய சில கொடூரமான விபரங்களை வெளிப்படுத்தப்பட்டது.