இந்தியாவின் அனுசரணையில் கடந்த டிசெம்பர் இறுதி வாரத்தில் புத்தகாயவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இலங்கையின் பௌத்த பிக்குகள் குழுவொன்று, திபெத் ஆன்மீகத் தலைவர் தலாய்லாமாவை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருக்கிறது.
ராமன்ய மகா நிக்காயவின் மகாநாயக்க தேரர் மாகுல்வௌ விமல மகாநாயக்க தேரர் மற்றும் அஸ்கிரிய, மல்வத்த பீடங்களைச் சேர்ந்த பௌத்த பிக்குகள், கடந்த 27ஆம் திகதி புத்தகாயவில் தலாய்லாமாவைச் சந்தித்திருந்தனர்.
இதன்போதே அவர்கள் தலாய்லாமாவை இலங்கைக்கு வருமாறு வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர்.
தேரர்கள் தலாய்லாமாவை இலங்கைக்கு அழைத்தமைக்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவது தலாய்லாமா இதுவரையில் இலங்கைக்கு விஜயம் செய்தது கிடையாது.
கௌதம புத்தர் காலடி பதித்த நாடான இலங்கைக்கு தலாய்லாமா போன்றவர்கள் வருகை தவருவதானது பெருமைக்குரியதாக இருக்கும். ஆனால் அவர் இதுவரையில் வந்திருக்கவில்லை.
அடுத்ததாக, புத்தகாயவுக்கு தலாய்லாமா சென்றிருந்த போது, ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு கூடியிருந்தனர். வழக்கத்துக்கு மாறான பக்தர்கள் அங்கு திரண்டிருந்தமை இலங்கை பௌத்த பிக்குகளுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கிறது.
தலாய்லாமாவின் பேச்சைக் கேட்பதற்காக குவிந்த மக்கள், இலங்கைக்கு வந்தால் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அடையும், நாடு எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி ஓரளவுக்குத் தீரும் என்பது, பௌத்த பிக்குகளின் கணக்காக இருக்கலாம்.
முன்னதாக தலாய்லாமாவை 2015ஆம் ஆண்டிலும் பௌத்த பிக்குகள் இலங்கைக்கு அழைத்திருந்தனர்.
ஆனால் மைத்திரி அரசாங்கம் அவருக்கு வீசா வழங்குவதற்கு தயாராக இருக்கவில்லை. அதனால் அவர் அப்போது அந்தப் பயணத்தை மேற்கொள்ள முடியாமல் போனது.
இப்போது மீண்டும் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாலும் அவர் அதனை ஏற்றுக் கொண்டு இலங்கை வருவது அரசாங்கத்தின் கையிலேயே இருக்கிறது. தலாய்லாமா ஒரு ஆன்மீகத் தலைவராக இருந்தாலும், அவருக்கு அரசாங்கம் அழைப்பு விடுக்க வேண்டும்.
அவ்வாறு இல்லாவிட்டாலும், அவருக்கான வசதிகளை செய்து கொடுக்க தயாராக இருக்க வேண்டும்.
அதுமட்டுமன்றி இலங்கை ஒரு பௌத்த நாடு என்று பெருமையுடன் கூறிக் கொண்டாலும், உலகப் பௌத்தர்களால் ஆன்மீகத் தலைவராக கொண்டாடப்படும் தலாய்லாமாவை இங்கு வரவும் முடியவில்லை.
அவரை அழைத்து வரவும் முடியவில்லை. ஆகவே அவரை அழைத்து வருவதற்கு தடையாகவுள்ள விடயங்களை முதலில் பௌத்த பிக்குகள் முதலில் அடையாளம் காண வேண்டும்.
தலாய்லாமா போன்ற ஆன்மீகத் தலைவர்கள் இலங்கைக்கு வருகை தருவதற்கு பெருந்தடையாக இருப்பது பூகோள அரசியல் தான்.
குறிப்பாக கூறுவதானால், சீனா தான் பெரும்பிரச்சினையாக இருக்கின்றது. இம்முறையும் அழைப்பு விடுக்கப்பட்டாலும் சீனா நிச்சயமாக தனது வேலைகளை ஆரம்பித்திருந்கும் என்பது தான் யதார்த்தம்.
ஏனென்றால், சீனாவைப் பொறுத்தவரையில், தலாய்லாமாவை இந்தியாவுக்குள் முடக்குவதற்கு சீனா தனது உச்சபட்ச இராஜதந்திர அணுகுமுறைகளை கையாளுகிறது.
திபெத் அல்லது, தாய்வான் பிரிவினையை ஆதரிக்காத, ஒரே சீனா என்ற கொள்கையை ஏற்றுக்கொள்ள உலக நாடுகளை சீனா வலியுறுத்துகிறது.
அதற்காக தன்னிடம் உள்ள பொருளாதார அல்லது வேறு பல சக்திகளைப் பயன்படுத்திக் கொள்கிறது.
இலங்கை சீனாவுடன் கொண்டிருக்கும் பாரம்பரிய நட்புறவின் காரணமாக, திபெத் அல்லது தாய்வானை அங்கீகரிக்க தயங்குகிறது.
திபெத் ஒரு பௌத்த புனித பிரதேசமாக இருந்தாலும், தலாய்லாமா ஒரு பௌத்த ஆன்மீக தலைவராக இருந்தாலும், இலங்கை அவருடன் நெருக்கமாக இருப்பதை தவிர்த்து வருகிறது. அதற்கு முழுக் காரணம் சீனாவுடன் கொண்டிருக்கும் உறவு தான்.
திபெத் மக்களின் ஆன்மீகத் தலைவராக இருப்பவர் தலாய்லாமா. அவர் திபெத் மக்களின் சுதந்திரத்தை வலியுறுத்துகிறார்.
ஆனால் திபெத்தை கைப்பற்றி தனது சுயாட்சிப் பிரதேசமாக அறிவித்திருக்கிறது சீனா.
இதன் பின்னரே, திபெத் மக்களால் கடவுளின் அவதாரமாக போற்றப்படுகின்ற 14ஆவது தலாய்லாமா, 1959ஆம் ஆண்டு திபெத்தில் இருந்து வெளியேறி இந்தியாவில் அடைக்கலம் தேடினார்.
அவருக்கு தர்மசாலாவில் இடமளித்து, நிழல் அரசு ஒன்றை நடத்துவதற்கு இந்தியா அங்கீகாரமும் அளித்திருக்கிறது.
அதேநேரம் தலாய்லாமா உயிருடன் இருக்கும் வரை தான் திபெத்தின் சுதந்திரக் கோரிக்கை உயிர்ப்புடன் இருக்கும் என்று சீனா நம்புகிறது.
அதனால் தான், அடுத்த தலாய்லாமாவாக கருதப்படும் பஞ்சன்லாமாவை சீனா கடத்தியுள்ளதோடு 1995 முதல் பொதுவெளியில் அவர் காணப்படவில்லை.
அவர் என்னவானார் என்றும் தெரியாத நிலைமை நீடிக்கின்றது. இவ்வாறானதொரு சூழலில் தலாய்லாமாவை, இலங்கை அழைத்து வந்து, உரிய மரியாதைகளை வழங்குவதை சீனா வெறுப்புடன் தான் பார்க்கும்.
ஆகவே, இந்த தடையை உடைத்தெறிந்து தலாய்லாமை இலங்கைக்கு அழைப்பதன் ஊடாகவே பௌத்தத்தின் இலங்கையில் உள்ள மேன்மைகளை தலாய்லாமா ஊடாக வெளியுலகத்திற்கு எடுத்துச் செல்ல முடியும்.