உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இருக்கும் இந்தியா, அதன் உலகளாவிய தொலைநோக்கு மற்றும் மூலோபாயத்தை செயற்படுத்துவதற்கான வாய்ப்பைப் ஜி-20 இற்கான தலைமைத்துவத்தினை வழங்குவதன் ஊடாகப் பெறப்போகின்றது.
இந்தியா கடந்த டிசம்பர் முதலாம் திகதி இந்தோனேசியாவில் வைத்து அந்நாட்டிடமிருந்து தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதோடு இந்த ஆண்டின் செப்டெம்பர் 09 மற்றும் 10 திகதிகளில் புதுடில்லியில் ஜி-20 தலைவர்கள் உச்சிமாநாட்டை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.
சர்வதேச நிதி நிலைத்தன்மை, காலநிலை மாற்றம் தணிப்பு, மற்றும் நிலையான வளர்ச்சி, உலகப் பொருளாதாரம் தொடர்பான முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்த கட்டமைப்பு செயற்படுகிறது.
32 வேறுபட்ட பணிநிலைகளில் 50க்கும் மேற்பட்ட நகரங்களில் 200க்கும் மேற்பட்ட கூட்டங்களை இந்தியா நடத்துவதற்கு திட்டமிட்டுள்ள இந்தியா மேலும் ஜி20 பிரதிநிதிகள் மற்றும் விருந்தினர்களுக்கு இந்தியாவின் செழுமையான கலாசார பாரம்பரியத்தைப் பற்றிய பார்வையை வழங்குவதற்கும் அவர்களுக்கு ஒரு தனித்துவமான இந்திய அனுபவத்தை வழங்குவதற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளது.
இந்தியாவின் ஜி-20இற்கான தலைமைத்துவமானது தெற்காசியப் பிராந்தியத்திற்கு, குறிப்பாக இலங்கையின் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்தியாவின் அண்டை நாடான இலங்கைக்கு ஜி20 அமைப்பின் பணிகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் குறித்து அண்மையில் இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் ஜி20 ஜனாதிபதி பதவிக்கான தலைமை ஒருங்கிணைப்பாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா ஆகியோருக்கு இடையில் கலந்துரையாடப்பட்டது.
இருவரும் புதுடில்லியில் சந்தித்து, குழுவின் இந்தியாவின் தலைவராக இருந்தபோது, ஜி20 உடன் இலங்கை ஈடுபடுவதற்கான வழிகள் குறித்து விவாதித்தனர். சர்வதேச நிதி ஒத்துழைப்பு மற்றும் கடன் மறுசீரமைப்புக்கான ஜி20 அணுகுமுறையைப் புரிந்துகொள்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கலந்துரையாடல் கவனம் செலுத்தியது.
இதேவேளை, தெற்காசிய பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் பீடத்தின் சர்வதேச உறவுகள் துறையின் தலைவரும் முனைவருமான, ஃபர்ஜனா ஷர்மின், இந்த மாநாட்டின் மூலமாக இந்தியா தெற்காசியாவிற்கு பாரிய முன்னேற்றகரமான பங்களிப்பைச் செய்ய முடியும் என்று கூறியுள்ளார். இந்தியா ஜி-20 தளத்தைப் பயன்படுத்தி புவிசார் அரசியல் பாதுகாப்பு பிரச்சினைகளை தீர்க்கவும், உறுப்பு நாடுகளுக்கு இடையிலான இடைவெளியைக் குறைக்கவும் வாய்ப்புக்களை ஏற்படுத்தும் என்றும் தொற்றுநோய்க்குப் பிந்தைய பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதில் ஒரு தீர்க்கமான பங்கைக் கொண்டிருக்க முடியும், ‘என்று ஃபர்ஜனா ஷர்மின் கூறினார்.
இவ்வாறிருக்கையில், ஜி-20இன் தலைவராக, இருக்கும் இந்தியா தெற்காசியப் பிராந்தியத்தின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து அந்நாடுகள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்த விவாதங்களை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்க முடியும்.
பொருளாதார ஸ்திரத்தன்மை, காலநிலை மாற்றம், உள்ளிட்ட இலக்குகளைப் பின்தொடர்வது, சுகாதாரப் பாதுகாப்பு, உணவு, உரங்கள் மற்றும் எரிபொருள் பாதுகாப்பு ஆகியவை தெற்காசியப் பிராந்தியத்திற்கு மிகவும் முக்கியமான விடயங்களாக காணப்படுகின்றன.
ஆகவே இந்த விடயங்களை இந்தியா கரிசனை கொள்ளும் பட்சத்தில் தெற்காசியப் பிராந்தியம் தொடர்பில் இந்தியா உலகளாவிய ரீதியில் குரல் கொடுக்க முடியும், மேலும் வளரும் நாடுகளை பாதிக்கும் நிகழ்ச்சி நிரல்களையும் முன்வைப்பதற்கும், சர்வதேச நிறுவனங்கள், சுகாதாரம், கல்வி, பாலினம், காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவை தொடர்பான விடயங்களில் அதிகமான ஈடுபாட்டைக் காண்பிப்பதற்கான வழிகளை ஏற்படுத்தவும் இந்தியாவுக்கு இயலுமானதாக இருக்கும்.
இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை எப்பொழுதும் அதன் அண்டை நாடுகளுக்கு முதன்மையளிப்பது முன்னிலைப்படுத்தியிருப்பதால், பிராந்தியத்தின் பெரிய நலனை மனதில் கொண்டு இந்தியா தன்னுடன் ஏனைய நாடுகளையும் கூட்டாக வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்வதற்கே திட்டமிட்டுள்ளது. இது ஒட்டுமொத்தமாக தெற்காசிய வலமே மேம்படுவதற்கு வித்திடுவதாக இருக்கின்றது. அந்த வகையில் ஜி20இற்கான இந்தியாவின் தலைமைத்துவமானது, தெற்காசியவிற்கு புதிய விதியை எழுதுவதாக அமையும்.