வவுனியா கோவில்குளம் இந்து கல்லூரிக்கு புதிய அதிபரை நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் ஓய்வுபெற்றதையடுத்து புதிய அதிபரொருவர் நியமிக்கப்பட்டு இன்று பதவியேற்க இருந்தார்.
எனினும் குறித்த அதிபர் முன்பு கடமையாற்றிய பாடசாலையில் சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக தாம் அறிந்தமையால் மாணவர்களின் பாதுகாப்பு கருதி அவரை பாடசாலை அதிபராக ஏற்க முடியாது என தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது வேண்டாம் வேண்டாம் தகுதியற்ற அதிபர் வேண்டாம், மாணவர்களின் எதிர்காலத்தை அழிக்கும் அதிபர் வேண்டாம் போன்ற பதாதைகளை ஆர்ப்பாட்டகாரர்கள் தாங்கியிருந்தனர்.
இவ் ஆர்ப்பாட்டத்தில் பாடசாலை பழையமாணவர்கள், பெற்றோர், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.