இலங்கையின் பல பகுதிகளில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, 13 மாவட்டங்களில் உள்ள 74 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவுகளை உள்ளடக்கி விசேட டெங்கு தடுப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.
இந்த விசேட வேலைத்திட்டம் எதிர்வரும் நவம்பர் 9 முதல் 14 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.
நுளம்புப் பெருக்கம் தொடர்பான ஆய்வுத் தரவுகளின் அடிப்படையில், டெங்கு அதிக ஆபத்துள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்ட இடங்களில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பதில் பணிப்பாளர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.
மேல், தென், சப்ரகமுவ, ஊவா, வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, குறித்த மாகாணங்களில் அடையாளம் காணப்பட்ட சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளை இலக்காகக் கொண்டு விசேட டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் இதுவரை சுமார் 105,500 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், டெங்கு நோய் காரணமாக 79 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.














