ஒரு நாடு என்ற வகையில் நம்பிக்கையை கட்டியெழுப்புவதன் மூலம் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெற முடிந்துள்ளது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து அனைவரும் ஒரே கொள்கை கட்டமைப்பிற்குள் செயற்பட வேண்டும் என்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.
நாட்டில் நிலவும் பொருளாதார மற்றும் நிதி நெருக்கடிக்கு தீர்வு காண எடுக்கப்பட வேண்டிய திருத்த நடவடிக்கைகள் குறித்து நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற, தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த வருடத்தின் முதல் காலாண்டின் பின்னர் நாட்டின் பொருளாதாரம் மேம்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி, 2024 ஆம் ஆண்டில் சிறந்த பொருளாதார முன்னேற்றத்தை அடைவதற்கான நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.
நாட்டின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் போது மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரச துறைகள் மாத்திரமன்றி தனியார் துறைகளும் பலப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த வருட இறுதிக்குள் உள்நாட்டு வருமானத்தை அதிகரிக்க முடியும் என எதிர்பார்ப்பதாகவும் இதன் மூலம் மக்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்க முடியும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.