இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு டிக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட படகில் 2 பில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான சுமார் 160 கிலோ கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் இருந்ததாக பாதுகாப்பு பிரதிப அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் உரையாற்றிய அவர், ஐஸ் போதைப்பொருளுக்கு மேலதிகமாக 21 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டதாகக் கூறினார்.
இலங்கையின் தெற்கே ஆழ்கடலில் போதைப்பொருட்களை கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் பல நாள் மீன்பிடிப் படகு 5 சந்தேக நபர்களுடன் கைப்பற்றப்பட்ட நிலையில் நேற்று டிக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
ஆரம்பக்கட்ட விசாரணைகளில், குறித்த படகு கந்தர பகுதியில் இருந்து புறப்பட்டது என்பதும் தெரிய வந்துள்ளது.
இந் நிலையில், படகில் இருந்து மீட்கப்பட்ட போதைப்பொருட்களும், கைதான சந்தேக நபர்களும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.















