கிறிஸ்மஸ் பண்டிகையை ஆடம்பரமாகவும், வெகு விமரிசையாகவும் கொண்டாடுவதைத் தவிர்த்து விழாக்களுக்கான பணத்தை மிச்சப்படுத்தி, புயலால் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாய் நிற்கும் நம் சக உறவுகளுக்கு ஒருவேளை உணவாகவோ, உடையாகவோ அல்லது அவர்கள் வாழ்வை மீட்டெடுக்கும் உதவியாகவோ வழங்குவதே, நாம் இறைவனுக்குச் செய்யும் உண்மையான தொண்டாக அமையும் என வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்மஸ் நத்தார் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்து , வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிலையே அவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
வழக்கமாக கிறிஸ்மஸ் என்றாலே குதூகலமும், கொண்டாட்டமும் தான் நம் நினைவுக்கு வரும். ஆனால், இம்முறை எமது நாடும், எமது மாகாணமும் பெரும் சோகத்தைச் சுமந்து நிற்கிறது. அண்மையில் நம்மைத் தாக்கிய ‘டித்வா’ புயல், நம் மண்ணில் ஏற்படுத்திய வடுக்கள் இன்னும் ஆறவில்லை. அந்தப் பேரிடரில் தங்கள் உயிர்களையும், உறவுகளையும், வாழ்நாள் சேமிப்பான உடமைகளையும் இழந்து தவிக்கும் நம் சொந்தங்களின் கண்ணீரை கவனிக்காது விடமுடியாது.
இயேசு பிரான் ஒரு எளிய குடிலில் பிறந்தவர். ஏழைகளின் துயரைத் துடைக்கவே அவர் அவதரித்தார். எனவே, இந்த ஆண்டு கிறிஸ்மஸ் பண்டிகையை ஆடம்பரமாகவும், வெகுவிமரிசையாகவும் கொண்டாடுவதைத் தவிர்த்து விடுமாறு உங்கள் அனைவரையும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
விழாக்களுக்கான பணத்தை மிச்சப்படுத்தி, புயலால் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாய் நிற்கும் நம் சக உறவுகளுக்கு ஒருவேளை உணவாகவோ, உடையாகவோ அல்லது அவர்கள் வாழ்வை மீட்டெடுக்கும் உதவியாகவோ வழங்குவதே, நாம் இறைவனுக்குச் செய்யும் உண்மையான தொண்டாக அமையும்.
அதேபோல, மற்றுமொரு முக்கியமான விடயத்தையும் உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். தற்போது வடக்கு மாகாணத்தில் காற்றின் மாசின் தரம் வழமையை விடத் சற்று அதிகமாகவும், ஆபத்தான நிலையிலும் உள்ளதாகத் தரவுகள் கூறுகின்றன.
எனவே, தயவுசெய்து இந்த கிறிஸ்மஸ் தினத்தில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்த்துவிடுங்கள். பட்டாசுகளின் சத்தத்தையும் புகையையும் தவிர்த்து, அமைதியாகவும் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையிலும் பண்டிகையைக் கொண்டாடுவோம்.
புயல் காற்றால் சாய்ந்த மரங்களை விட, நம் நம்பிக்கை வேர்கள் ஆழமானவை. இருள் சூழ்ந்த இந்த நேரத்தில், கிறிஸ்மஸ் ஒளி நம் அனைவரின் வாழ்விலும் நம்பிக்கையையும், ஆறுதலையும் தரட்டும். சாதி, மத பேதங்களைக் கடந்து, ஒரு தாய்ப் பிள்ளைகளாய் ஒன்றிணைந்து, பாதிக்கப்பட்வர்களை அரவணைத்து இக்கட்டான சூழலை வெல்வோம்.
அனைவருக்கும் அமைதி தவழும் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்! என குறிப்பிடப்பட்டுள்ளது.
















