அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேயை தன்னிச்சையாக தடுத்துவைத்திருப்பதை உடனடியாக முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என ஏழு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன.
2022 ஓகஸ்ட் 8ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட மாணவர் செயற்பாட்டாளர் வசந்த முதலிகேயை தன்னிச்சையாக தடுத்துவைத்திருப்பதை இலங்கை அரசாங்கம் உடனடியாக முடிவிற்கு கொண்டுவரவேண்டும் என ஏழு மனித உரிமை அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
ஓகஸ்ட் 21ஆம் திகதி முதல் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க கைசாத்திட்ட பயங்கரவாத தடுப்பு உத்தரவின் கீழ் அவர் தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.
வசந்த முதலிகேவின் பிணை மனு மீதான விசாரணை, இன்று(செவ்வாய்கிழமை) நீதிமன்றத்தில் நடத்தப்படவுள்ளது.
எனினும், அரசாங்கத்தின் சார்பாகச் செயல்படும் சட்டமா அதிபர் திணைக்களம் அதை எதிர்த்தால் நீதிமன்றம் பிணையை அனுமதிக்காது என மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் மற்றும் மேம்பாட்டுக்கான ஆசிய மன்றம், சிவிகஸ், முன்னணி பாதுகாவலர்கள், மனித உரிமைகள் கண்காணிப்பகம், இலங்கை தொடர்பான சர்வதேச செயற்குழு மற்றும் சமாதானம் மற்றும் நீதிக்கான இலங்கை பிரசாரம் என்பன இந்த கோரிக்கையை விடுத்துள்ளன.