போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை சிறையில் அடைத்து பயனில்லை எனவும், அவர்களுக்கு புனர்வாழ்வு பயிற்சிகளும், சிகிச்சைகளும் வழங்கப்பட வேண்டும் எனவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருட்கள் தொடர்பில் எமக்கு பாரிய பிரச்சினை இருக்கின்றது.
இளைஞர்களுக்கு குற்றங்களுடன் தொடர்பு இருந்தால், சாட்சியங்கள் இருக்குமாயின் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர வேண்டும்.
அடிப்படைவாத ரீதியில் ஒரு கொள்கையை கொண்டிருப்பார்கள் என்ற காரணத்தினால் தினமும் நீதிமன்றத்திற்கு வரவழைத்து வழக்குகளை தொடுத்து கொண்டு இருக்க முடியுமா?.
அதற்கு சட்டத்திலும் இடமில்லை. அடிப்படைவாத கொள்கைகளை கொண்டுள்ளவர்களை புனர்வாழ்வு பயிற்சிகளுக்கு உட்படுத்தி, சமூகமயப்படுத்த வேண்டும்.
எவ்வளவு காலத்திற்கு வழக்குகளை நடத்துவது. இலங்கையில் வழக்கு ஒன்று விசாரித்து முடிய எவ்வளவு காலம் செல்லும் என்பது நாம் அறிவோம்.
ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருட்களுக்கு அடிமையான அதிகளவானோர் இருக்கின்றனர்.
அவர்களை பிரித்து அடையாளம் காண வேண்டும். இவர்களுக்கு மேலே சர்வதேச ரீதியில் தொடர்புகள் இருக்கும் போதைப் பொருள் கடத்தல்காரர்கள் இருக்கின்றனர்.
அவர்களுக்கு கீழே நாடு முழுவதும் விநியோகிக்கும் வலையமைப்பை சேர்ந்த சுமார் 500 பேர் இருக்கின்றனர். போதைப் பொருளுக்கு அடிமையான சுமார் ஒரு லட்சம் பேர் இருக்கின்றனர்.
போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை விரட்டி செல்வதில் பயனில்லை.
அவர்களை சிறையில் அடைத்து பயனில்லை. அவர்களுக்கு புனர்வாழ்வு பயிற்சிகளும், சிகிச்சைகளும் வழங்கப்பட வேண்டும்.
நெத்தி மீன்களை துரத்தி சென்று பிடித்து சிறையில் அடைத்து சிறைச்சாலைகளை நாம் நிரப்பி வருகின்றோம். இவர்களுக்கு எதிரான வழக்குகள் தினமும் விசாரிக்கப்படுகின்றன.
சுறா மீன்களாக போதைப் பொருட்கள் கடத்தல்காரர்களில் வழக்குகளை விசாரிக்க நேரமில்லை. அவர்கள் தப்பிச் சென்று விடுகின்றனர்.“ எனத் தெரிவித்துள்ளார்.