150 மில்லியன் டொலர் முதலீட்டில் பொது – தனியார் பங்காளித்துவமாக முன்மொழியப்பட்ட கொழும்பு தெற்கு துறைமுக அபிவிருத்தித் திட்டத்தின் முதல் கட்டத்தை இலங்கை முன்னெடுக்க உள்ளது.
அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், கொழும்பு சர்வதேச கொள்கலன் முனையங்கள் பிரேரணையை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
கொழும்பு துறைமுகத்தை தெற்காசியாவில் சேவை வழங்கல் மையமாக மாற்றுவதற்கு அரசாங்கம் முனைப்புடன், துறைமுகங்கள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழுவின் மதிப்பீட்டின்படி, தென் முனையதிற்கு சொந்தமான Battenberg மற்றும் Bloemendhal சேவை விநியோகப் பகுதிகள் பொது – தனியார் பங்காளித்துவத்தின் கீழ் அபிவிருத்தி செய்யக்கூடிய பகுதிகளாக அடையாளம் காணப்பட்டன.
அதன்படி சைனா மெர்ச்சன்ட் போர்ட் கம்பெனி, கொழும்பு இன்டர்நேஷனல் கன்டெய்னர் டெர்மினல்ஸ் கம்பெனி மற்றும் இலங்கை துறைமுக அதிகாரசபையின் கீழ் இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.