மொட்டு சின்னத்திற்கு பதிலாக படகு சின்னத்தில் களமிறங்கி எமது மாவட்ட மக்களை ஏமாற்றுவதற்கு சிவநேசதுரை சந்திரகாந்தன் எடுத்திருக்கும் முயற்சியை வன்மையாக கண்டிக்கின்றேன் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “ முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான பசில்ராஜபக்ஸ அவர்கள் யாழில் வீணைச்சின்னத்திலும் கிழக்கில் மட்டக்களப்பில் படகு சின்னத்திலும் பொதுஜன பெரமுன போட்டியிடுவதாக தெரிவித்திருந்தார்.
படகு என்பது மட்டக்களப்பு மாவட்டத்தில் மொட்டின் முகவராகவே உள்ளது என்பதை நாங்கள் கடந்த காலத்தில் தெரிவித்துவருகின்றோம்.
பொதுஜன பெரமுனவின் மாவட்ட அமைப்பாளர் சந்திரகுமார் என்பவர் மூன்று பகுதிகளில் போட்டியிடப்போவதாக தெரிவித்திருந்த செய்திவெளிவந்திருந்தது.ஆனால் வேட்பு மனுக்கான கட்டுப்பணத்தினை அவர் செலுத்தியிருந்தபோதிலும் அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தது தொடர்பில் அறிவிக்கப்படவில்லை.
அப்போதே சந்தேகம் தெரிவிக்கப்பட்டது.அன்று எழுந்த சந்தேகங்கள் அனைத்தையும் பசில் ராஜபக்ஸ அவர்கள் படகு கட்சியின் ஊடாகத்தான் பொதுஜன பெரமுன கட்சி போட்டியிடுகின்றது என்பதை உறுதியாக தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டிலிருந்து இந்த நாட்டினை நாசமாக்கிய பொதுஜன பெரமுன கட்சி,நாட்டின் விவசாயிகளை நடுத்தெருவில் கொண்டுவந்துவிட்ட கட்சி,எரிபொருள் தட்டுப்பாட்டை நாட்டில் ஏற்படுத்தியவர்கள்,எங்களது பிரதேசத்திலிருந்த மண் வளங்களை கொள்ளையிட்டவர்கள் இந்த பொதுஜன பெரமுனவினை சோந்தவர்கள்.
இவ்வாறு பொதுஜன பெரமுன என்ற கட்சியின் ஜனாதிபதி நாட்டினை விட்டு ஓடவேண்டிய சூழ்நிலையில் அக்கட்சியின் பிரதமர்து பதவியை இராஜினாசெய்த நிலையிலும் அதன் தேசிய அமைப்பாளர் அமெரிக்க சென்று ஒழிந்த சூழ்நிலையினையும் இந்த நாட்டில் ஏற்பட்டிருந்தது.
பொதுஜன பெரமுனவின் காரியாலம் மட்டக்களப்பு உட்பட அனைத்து பகுதிகளிலும் மக்களினால் அடித்து நொறுக்கப்பட்ட நிலையில் பொதுஜன பெரமுன என்ற கட்சி இங்கு போட்டியிட முடியாத நிலையில் மொட்டு சின்னத்திற்கு பதிலாக படகு சின்னத்தில் களமிறங்கி இந்த மாவட்ட மக்களை ஏமாற்றுவதற்கு சிவநேசதுரை சந்திரகாந்தன் எடுத்த முயற்சியை வன்மையாக கண்டிக்கின்றேன்.
பொதுஜன பெரமுனவில் போட்டியிடுவது என்றால் அதனை தைரியமாக சொல்லுங்கள்.கட்சியின் செயலாளர் சொல்கின்றார் தனித்து படகில் போட்டியிடுகின்றோம் என்று ஆனால் எஜமான பசில் ராஜபக்ஸ கூறுகின்றார் மொட்டு படகில் போட்டிபோடுகின்றது என்று கூறுகின்றார்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா போன்று துணிவுடன் நில்லுங்கள்,ஒரு முதுகெலும்பு உள்ளவராகயிருங்கள்.டக்ளஸ் தேவானந்தா தாங்கள் பொதுஜன பெரமுன கட்சி என்று தைரியமாக ஏற்றுக்கொள்கின்றார்.
ஆனால் நீங்கள் மட்டும் இங்கு இரட்டைவேடம் போடுகீன்றீர்கள்.மட்டக்களப்பு மாவட்ட மக்களை தொடர்ந்து ஏமாற்றமுடியும் என்று நினைக்கின்றீர்களா?
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி எங்களுக்கு போட்டியில்லை.ஆனால் மாவட்ட மக்களை தொடர்ந்த நீங்கள் ஏமாற்றமுடியாது.நேற்றைய தினம் வாழைச்சேனை பிரதேசசபையினை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி இழந்துள்ளது.
இது முதலாவது அடியாகும்.நாங்கள் நினைத்திருந்தால் வாகரையினையும் கைப்பற்றியிருப்போம்.ஆனால் அந்த மக்களால் நீங்கள் துரத்தியடிக்கப்படவேண்டும் என்பதற்காக விட்டிருக்கின்றோம்.வட்டாரங்களில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினர் பிச்சையெடுப்பதுபோன்று வேட்பாளர்களை தேடி அலைகின்றனர்.” என தெரிவித்தார்.