துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த ஒடிசா அமைச்சர் நபா கிஷோர் தாஸ் குடும்பத்திற்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நவீன் பட்நாயக் தலைமையிலான ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராகவும், பிஜு ஜனதாதள கட்சியின் மூத்த தலைவராகவும் இருப்பவர் நபா கிஷோர் தாஸ் நேற்று ஜார்சுகுடா மாவட்டம் பிரஜாராஜ் நகர் பகுதியில் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் சென்றார்.
பிராஜாநகரை அடைந்தது அமைச்சர் நபா கிஷோர் தாஸ் காரைவிட்டு இறங்கியபோது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த உதவி காவல் ஆய்வாளர் கோபால் தாஸ் என்பவர், அமைச்சரின் மார்பை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டார்.
நான்கு முறைக்கு மேல் அவர் துப்பாக்கியால் சுட்டதால் அமைச்சர் நபா கிஷோர் தாஸ் சரிந்து கீழே விழுந்துள்ளார்.
இந்த நிகழ்வின் போது உள்ளூர் காவல்நிலைய ஆய்வாளர் உள்ளிட்ட இருவர் மீதும் கோபால் தாஸ் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
நபா தாஸின் மார்பில் குண்டு பாய்ந்ததால் அவரை ஜார்சுகுடா மாவட்ட தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக தலைநகரான புவனேஷ்வருக்கு கொண்டு செல்லப்பட்டார்.
புவனேஷ்வர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சுகாதாரத் துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
குண்டடிபட்ட உடனேயே ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் மருத்துவமனைக்கு விரைந்து நபா தாஸின் குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ஒடிசா சுகாதாரத்துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸின் மரணத்திற்கு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது.
“ஒடிசா சுகாதாரத்துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸின் மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சியில் உறைந்தேன்.
அவரது குடும்பத்தினருக்கும், நல விரும்பிகளுக்கும் என ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.”
ஒடிசா மாநில ஆளுநர் கணேஷி லால் மற்றும் முதலமைச்சர் நவீன் பட்நாயக் உள்ளிட்ட அரசியல் ஆளுமைகள் இரங்களைத் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை நபா கிஷோர் தாஸின் உடல் பிஜு ஜனதா தள கட்சி அலுவலகத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நபா தாஸின் இறுதிச் சடங்கு நிகழ்வுகள் அவரது சொந்த ஊரான ஜார்சுகுடாவில் அரசு முறைப்படி நடைபெறும் என பிஜெடி கட்சியின் துணைத் தலைவர் தேபி பிரசாத் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
அமைச்சர் நபா தாஸின் மரணத்தையொட்டி மூன்று நாட்களுக்கு மாநிலம் முழுவது துக்கம் அனுஷ்டிக்கப்படும் எனவும் அவருக்கு துக்கம் கடைபிடிக்கும் விதமாக தேசிய கொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்படும் எனவும் ஒடிசா மாநில அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.