தமிழ் மக்களின் புரையோடிப் போயிருக்கின்ற பிரச்சனைகள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியில் ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்க முற்பட்டபோது அதனை அவர் நிராகரித்திருந்ததாக ஆதவனின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு ஆரயம்பதியில் இன்று(புதன்கிழமை) தேசிய ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் இடம்பெற்றது.
குறித்த கூட்டம் நிறைவு பெற்றதும் வடக்கு கிழக்கு மாகாணத்தில் சிறுபான்மை இன மக்கள் முகங்கொடுக்கும் பிரச்சனை தொடர்பாகவும், 13வது திருத்தச் சட்டம் தொடர்பாகவும் சுதந்திர தினத்துக்கு முன்பாக ஜனாதிபதி தீர்வு ஒன்றை வழங்க இருப்பதாக தெரிவித்த கருத்து தொடர்பாகவும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கிறிஸ்தவ மக்களிடம் மன்னிப்பு கோரிய விடயம் தொடர்பாகவும் கேள்விகளை எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியில் அவரிடம் கேட்க ஊடகவியலாளர்கள் முற்பட்டனர்.
இதன்போது அதனை அவர் நிராகரித்திருந்ததாக ஆதவனின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
மாற்றம் ஒன்று ஏற்பட வேண்டும் எனவும், தன்னுடைய தலைமையில் ஒரு அரசாங்கத்தை அமைக்க வேண்டும் எனவும் கங்கணம் கட்டிக்கொண்டு மேடைகளில் பிரச்சாரம் செய்கின்ற எதிர்க்கட்சித் தலைவர் பிராந்திய ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்காமல் வாகனத்தில் ஏறிச் சென்றமை ஊடகவியலாளர்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.