துருக்கி – சிரிய நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,900 ஐ கடந்துள்ளது.
துருக்கியில் 5 ஆயிரத் 894 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதே நேரம் சிரியாவில் இதுவரை 2 ஆயிரத்து 32 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7ஆயிரத்து 926 ஆக பதிவாகியுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகள் 20 ஆயிரம் பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தவிர்க்க முடியாமல் அதிகரிக்கும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள வடமேற்கு சிரியாவில் சில மணிநேரங்களுக்கு முன்பு ஆயிரமாக இருந்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது ஆயிரத்து 220 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் வௌிநாடுகளின் உதவிகளுடன் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ உள்ளிட்ட அமைப்புகளை போன்று அமெரிக்கா, பிரித்தானியா, சீனா, ரஷ்யா, இந்தியா, ஜப்பான், ஈரான், ஈராக், அவுஸ்ரேலியா, நியூஸிலாந்து, பிரேஸில், பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகள் தருக்கி மற்றும் சிரியாவிற்கு தமது உதவிகளை வழங்கிவருகின்றனர்.
7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்குப் பின்னர் உயிர் பிழைத்தவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அச்சமடைந்துள்ள நிலையில், விமான நிலையம் பலரின் புகலிடமாக மாறியுள்ளது.
நிலநடுக்கத்தின் மையப்பகுதி காசியான்டெப் நகருக்கு வெளியே துருக்கியில் வசிக்கும் மில்லியன் கணக்கான சிரிய அகதிகளின் இருப்பிடமாக காணப்படுகின்றது.
7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் 1999 ஆண்டுக்கு பின்னர் துருக்கியினை தாக்கிய மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஆகும்.
ஆகஸ்ட் 1999 இல், துருக்கியின் மிகப்பெரிய நகரமான இஸ்தான்புல்லுக்கு தெற்கே மர்மாராவில் 7.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் 45 விநாடிகள் உலுக்கியது.
இதன்போது 17 ஆயிரத்து 500 பேர் உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றமைக் குறிப்பிடத்தக்கது.