நெருக்கடிகள் மத்தியில் நாடு அராஜக பாதையில் செல்வதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பது எதிர்க்கட்சி உள்ளிட்ட அரசியல் சக்திகளின் பொறுப்பாகும் என சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் அவர் விடுத்திருக்கும் அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்போது உருவாகியிருக்கும் சிக்கல்களை சரியாக மதிப்பிட்டு, உருவாகிக்கொண்டிருக்கும் எதிர்மறை சூழ்நிலைகளை மேலும் வளர விடாமல் இருப்பது அரசாங்கத்தின் முக்கிய கடமையாகும் என அவர் இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாட்டில் உருவாகிக் கொண்டிருக்கும் பாரதூரமான நெருக்கடிகளை சரியாக மதிப்பீடு செய்து, பொது இணக்கப்பாட்டின் ஊடாக, மக்களின் இறையாண்மை அதிகாரத்தை சரியாக பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மக்கள் ஆணையின் ஊடாக சிறந்த ஆட்சிக்கு வழிவகுக்கும் தேர்தலுக்கு தாமதமின்றி பிரவேசிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.