மகளிருக்கான ரி-20 உலகக்கிண்ணத் தொடரின் 17ஆவது லீக் போட்டியில், நியூஸிலாந்து அணி 102 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது.
பார்ல் மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) குழு ஏ பிரிவில் நடைபெற்ற போட்டியில், நியூஸிலாந்து அணியும் இலங்கை அணியும் மோதின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 162 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, அமெலியா கெர் 66 ஓட்டங்களையும் பேட்ஸ் 56 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இலங்கை அணியின் பந்துவீச்சில், அச்சினி குலசூரிய மற்றும் ரணவீர ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 163 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இலங்கை அணி, 15.5 ஓவர்கள் நிறைவில் 60 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால், நியூஸிலாந்து அணி 102 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது. அதேவேளை இந்த தோல்வியின் மூலம் இலங்கை அணி, அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்தது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சாமரி அத்தபத்து 19 ஓட்டங்களையும் மல்ஷா செஹானி 10 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சில், அமெலியா கெர் மற்றும் லியா தஹுஹூ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ஈடன் கார்ஸொன், ஜெஸ் கெர், ஹன்னா ரோவ் மற்றும் பிரான் ஜோனஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 66 ஓட்டங்களையும் 2 விக்கெட்டுகளையும் சாய்த்த அமெலியா கெர் தெரிவுசெய்யப்பட்டார்.