யாழ். போதனா வைத்தியசாலையின் கழிவுகளை வவுனியாவில் எரிப்பதற்கு வட மாகாண சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளதாக தனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் அதற்கு எவ்விதத்திலும் உடன்பட முடியாது என வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “யாழ் போதனா வைத்தியசாலையின் கழிவுகளை தெல்லிப்பழையில் எரிக்க முடியாது எனவும் வரும் காலங்களில் வவுனியாவில் எரிப்பதற்கான முடிவை வட மாகாண சுகாதார அமைச்சின் அதிகாரிகளின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அறியக்கிடைக்கின்றது.
இவ்வாறான முடிவை எடுப்பதற்கு முன் வவுனியா மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மக்களுடன் கலந்துரையாடப்பட்டிருக்க வேண்டும். வெறுமனே அலுவகத்திற்குள் இருந்துகொண்டு எடுக்கும் முடிவுகள் சமூகங்களுக்கிடையில் பிரிவினையையும் குழப்பத்தினையும் ஏற்படுத்தும். இதனை அதிகாரிகளும் உணர்ந்துகொள்ள வேண்டும்.
வவுனியா வைத்தியசாலையின் கழிவுகள் தற்போது ஓமந்தை வைத்தியசாலை எரியூட்டும் நிலையத்தில் எரியூட்டப்படுவதால் அருகாமையில் உள்ள ஓமந்தை மத்திய கல்லூரி மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான சூழலில் யாழ் போதனா வைத்தியசாலையின் கழிவுகளையும் வவுனியாவில் எரிக்க முற்படுவதானது ஏற்றுக்கொள்ள முடியாத செயற்பாடாகும்.
எனவே புதிய பொறிமுறைகளையும் திண்ம கழிவகற்றல் முகாமைத்துவத்தினூடான புதிய செயற்றிட்டங்களையும் கையாண்டு யாழ் போதனா வைத்தியசாலை கழிவுகளை யாழ்ப்பாணத்திலேயே எரிப்பதற்கு வட மாகாண சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.