இலங்கை சுதந்திரமடைந்து 75ஆண்டுகள் நிறைவடைந்ததை இம்மாதம் நான்காம் திகதி வெகுவிமர்சையாக கொண்டாடியது. 75ஆவது சுதந்திர தின நிகழ்வு ஒரு வரலாற்று மைல்கல்லாகும்.
உண்மையில், இலங்கையின் அண்மைய கால நிலைமைகளில் இருந்து பார்க்கின்றபோது, இவ்விதமான எளிய முறையில் கூட சுதந்திர தின நிகழ்வொன்றைக் கொண்டாட முடியுமா என்ற கேள்விகளே நீடித்திருந்தன.
பொருளாதார நெருக்கடிகள் ஒருபுறமிருக்கையில், அரசியல் ஸ்திரமற்ற சூழல் உள்ளிட்ட பல விடயங்களால் இலங்கை நலிவடைந்த நிலைமைக்குள்ளேயே இருந்தது.
அந்த வகையில், இலங்கையின் தற்போதைய சாதாரண இயக்கத்துக்கு அண்மைய நாடாக இருக்கும் இந்தியாவின் பங்களிப்பானது கணிசமானது.
இதுவரையில் இந்தியா 4பில்லியன் டொலர்களுக்கு அதிகமான உதவிகளை இலங்கைக்கு வழங்கியுள்ளது.
இதில் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்டவை மிகவும் முக்கியமானவை. இவ்விதமான நிலைமையால், இலங்கையில் அன்றாட நெருக்கடிகள் ஓரளவேனும் குறைந்திருக்கின்றது.
அதனால் தான், மக்கள் வீதிக்கு இறங்கும் நிலைமைகள் ஓய்வடைந்து, அன்றாட நிலைமைகள் சாதாரணமாக நகர்ந்து செல்கின்றன என்பதைக் கண்கூடாகக் காணக்கூடியதாக உள்ளது.
குறிப்பாக, அண்டை ‘நாட்டுக்கு முதலிடம்’ என்ற பிரதமர் நரேந்திர மோடியின் அயலுறவுக் கொள்கை காரணமாக, இலங்கையில் நெருக்கடிகள் நிலைமைகளை தணிப்பதில் இந்தியா கணிசமான பங்காற்றியுள்ளது.
இருப்பினும், இந்தியா மீது இலங்கையின் அனைத்துப் பிரஜைகளுக்கும் முறையான அபிமானமற்ற சூழலே இன்னமும் நிகழ்வுகின்றது. இந்தியாவின் மேலாதிக்கம் தங்கள் மீது சுமத்தப்படுகின்றது என்ற அபிப்பிராயமும் தென்னிலங்கை சிங்கள மக்களுக்கு உள்ளது.
அதேநேரம், வட,கிழக்கு, மலைய மக்களுக்கு இந்தியாவினாலேயே தமக்கான அபிலாஷைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியும் என்று பெருநம்பிக்கை கொண்டவர்களாக இருக்கின்றார்கள்.
இந்த இடத்தில், இந்தியா மிகவும் நேர்த்தியாக விடயங்களை கையாண்டு வருகின்றது.
ஈராயிரம் வருடங்களுக்கு முன்னதாக, கலைகலாசார ரீதியாக இலங்கை பூராகவும் பல்வேறு தொடர்புகளைக் கொண்டிருக்கும் இந்தியா அதன் ஊடாக இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது.
குறிப்பாக, கலாசார ரீதியா காணப்படுகின்ற பின்னிப்பிணைப்புக்களை வெகுவாக வெளிப்படுத்தி அவற்றை வலுப்படுத்தும் செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளது.
இதனால், எந்தவொரு தரப்பினதும் மனங்களும் கோணாது, தனது செல்நெறியை முன்னெடுத்து வருகின்றது. உதவிக்கரங்களை நீட்டி வருகின்றது.
இவ்வாறான பின்னணியில் இந்திய, இலங்கை உறவுகள் கடந்த காலத்தில் காணப்பட்ட நிலைமைகயிலும் பார்க்கையில் தற்போது வலுவடைந்து வருகின்றன என்பதை சந்தேகத்துக்கு இடமின்றி குறிப்பிட முடியும்.
இந்த நிலையில்தான், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இந்திய – இலங்கை உறவின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டியிருந்தார்.
துறைமுகம், மீள் புதுப்பிக்கத்தக்க சக்தி, ஹைட்ரோ கார்பன் உட்கட்டுமான அபிவிருத்தி தொடர்பில் இந்தியா கரிசனை கொண்டுள்ளது.
விவசாயம், பாலுற்பத்தி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் உயர் கல்வியிலும் மேலதிக முதலீடுகளை மேற்கொள்ள வேண்டிய தேவையுள்ளது.
பல தசாப்தங்களாக பாரிய நிறுவனங்கள் இலங்கையில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி செயற்பட்டு வருகின்றன.
காலி முகத்திடலில் பாரிய இந்திய நிறுவனங்கள் வர்த்தக நடவடிக்கைளை முன்னெடுத்து வருகின்றன
இலங்கையில் அரசியல் மாற்றங்கள் ஜனநாயகக் கட்டமைப்பு இ அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக பொறிமுறைக்கு அமையவே முன்னெடுக்கப்படுகின்றன.
இந்திய – இலங்கை உறவு என்பது யார் அதிகாரத்தில் உள்ளார் என்பதைப் பொறுத்து அமைவதல்ல.
ஆயிரமாண்டு காலமாக இரு நாட்டு மக்களிடையில் தொடரும் பிணைப்பை அவ்வாறே தொடர்ந்து முன்கொண்டு செல்ல எதிர்பார்த்துள்ளோம் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே கூறியிருந்தார்.
ஊண்மையிலேயே, ஜி-20நாடுகளுக்கு தலைமை தாங்கும் இந்தியா, 75ஆண்டுகள் சுதந்திரம் பெற்றுள்ள இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த எதிர்கால வளர்ச்சிக்கும் நிச்சியமாக கைகொடுக்கும் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை.