ஃபிஃபாவின் 2022ஆம் ஆண்டுக்கான சிறந்த ஆடவர் வீரராக அர்ஜென்டினா மற்றும் பரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணியின் முன்கள வீரர் லியோனல் மெஸ்ஸி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
2022ஆம் ஆண்டுக்கான ஃபிஃபாவின் விருதுகள் வழங்கும் விழா, நேற்று (திங்கட்கிழமை) பரிஸில் நடைபெற்றது.
பிரான்ஸின் முன்கள வீரர்களான கைலியன் எம்பாப்பே மற்றும் கரீம் பென்சிமா ஆகியோரை பின்தள்ளி 35 வயதான மெஸ்ஸி இந்த விருதை வென்றுள்ளார்.
கடந்த ஆண்டு கட்டாரில் நடைபெற்ற கால்பந்து உலகக்கிண்ணத் தொடரில், அர்ஜென்டினா அணிக்கு சம்பியன் கிண்ணத்தை வென்றுக் கொடுத்ததில், மெஸ்ஸிக்கு மிக்பெரிய பங்கு உள்ளது.
அவர், 2021ஆம் ஆண்டு அர்ஜென்டினா மற்றும் பரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணிளுக்காக 49 போட்டிகளில் விளையாடி 27 கோல்களை அடித்துள்ளார்.
அத்துடன் இது மெஸ்ஸிய் இரண்டாவது சிறந்த வீரருக்கான ஃபிஃபா விருதாகும். இதற்கு முன்னதாக அவர் 2019ஆம் ஆண்டு இந்த விருதினை வென்றிருந்தார்.
இதேவேளை, பார்சிலோனாவின் அலெக்ஸியா புட்டெல்லாஸ் இந்த ஆண்டின் சிறந்த மகளிர் வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார்.
மூன்றாவது முறையாக உலகக்கிண்ணம் வெல்வதற்கு அர்ஜென்டினா அணியை வழிநடத்திய லியோனல் ஸ்கலோனி, ஆண்டின் சிறந்த ஆடவர் பயிற்சியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மன்செஸ்டர் சிட்டியை ஆறாவது பிரீமியர் லீக் பட்டத்திற்கு வழிநடத்திய பெப் கார்டியோலாவை தோற்கடித்து ஸ்காலோனி இந்த விருதை வென்றார்.
அதேபோல, கடந்த ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற யு.இ.எஃப்.ஏ. சம்பியன்ஷிப் தொடரில் அணி சம்பியன் பட்டம் வெல்வதற்கு திட்டங்களை வகுத்துக் கொடுத்த இங்கிலாந்து மேலாளர் சரீனா வைக்மேன், இந்த ஆண்டின் ஃபிஃபாவின் சிறந்த மகளிர் பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டார்.
யு.இ.எஃப்.ஏ. சம்பியன்ஷிப் தொடரில் இங்கிலாந்து அணி, சம்பியன் பட்டம் வென்றதே அந்த அணியின் முதல் பெரிய சம்பியன் பட்டமாகும்.
ஆஸ்டன் வில்லா மற்றும் அர்ஜென்டினாவின் கோல் காப்பாளரான எமிலியானோ மார்டினெஸ் சிறந்த ஆடவர் கோல் காப்பாளராக தெரிவுசெய்யப்பட்டார். அதேபோல, இங்கிலாந்தின் மேரி ஏர்ப்ஸ் பெண்களுக்கான விருதை வென்றார்.
30 வயதான மார்டினெஸ், தனது நாடு உலகக்கிண்ணம் வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தார். பிரான்ஸூக்கெதிரான இறுதிப் போட்டியில், ஷூட்அவுட் வெற்றி உட்பட நான்கு பெனால்டிகளை வெற்றிகரமாக முறியடித்தார்.
பெண்கள் சுப்பர் லீக்கில், மன்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடும் ஏர்ப்ஸ், யூரோ 2022இல் இங்கிலாந்தின் ஆறு போட்டிகளை வெற்றிக்கொள்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.
இந்த ஆண்டின் சிறந்த கோலுக்கான ஃபிஃபா புஸ்காஸ் விருதை போலந்து அணியைச் சேர்ந்த மார்சின் ஓலெக்ஸி வென்றார்.
அவர் தனது ஊன்றுகோல் உதவியுடன், வேகமாக வந்த பந்தை ஒரு பக்கமாக மேலே பாய்ந்து, அற்புதமாக பந்தை கோலுக்குள் புகுத்தினார்.
பெஃயார் பிளே விருதை ஜோர்ஜியாவின் லூகா லோச்சோஷ்விலி வென்றார். அவர் மயக்கமடைந்த நடுகள வீரர் உபாதைக்குட்பட்ட போது, விரைந்து செயற்பட்டு அவரின் உயிரைக் காப்பாற்றியமைக்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.
சிறந்த இரசிகர்களுக்கான விருது, உலகக்கிண்ணத்தை வென்ற அர்ஜெண்டினா இரசிகர்களுக்கு வழங்கப்பட்டது.
அத்துடன், ஃபிஃபாவின் ஆண்களுக்கான சிறந்த உலக பதினொருவர் அணி அறிவிக்கப்பட்டது.
இந்த அணியில், திபாட் கோர்டோயிஸ், அக்ரஃப் ஹக்கிமி, விர்ஜில் வான் டிஜ்க், ஜோவோ கேன்செலேர் கெவின் டி புருய்ன், லூகா மோட்ரிக், கேசெமிரேர், லியோனல் மெஸ்ஸி, எர்லிங் ஹாலண்ட், கரீம் பென்சிமா, கைலியன் எம்பாப்பே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.